ADDED : மே 06, 2025 09:46 PM
சென்னை:தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு ரிசல்ட் நாளை வெளியாகிறது. தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன.
மொத்தம், 8.21 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இம்மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்த நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாக, நாளை காலை 9:00 மணிக்கு, அண்ணா நுாற்றாண்டு நுாலக கூட்டரங்கில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், மாணவர்களின் பதிவெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் மொபைல் எண்ணிற்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.