ADDED : மே 07, 2026 04:25 AM
சென்னை: 'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியாகாது' என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத்தம் 8.27 லட்சம் மாணவ -- மாணவியர் தேர்வு எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 6 முதல் 20ம் தேதி வரை நடந்தது. பொதுத் தேர்வுகள் தேதி அறிவிப்பின்போதே, தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நடந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடிக்கிறது.
புதிய அரசு பதவியேற்ற பின், அரசின் அனுமதி பெற்று, தேர்வு முடிவுகளை வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது.
இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், '2025 -- 26ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் நடக்கின்றன. அதனால், முடிவுகள் வெளியாகும் நாள் குறித்த விபரம், அதற்கு முதல் நாள் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
