ADDED : ஜன 13, 2024 02:03 AM

சென்னை: சென்னையில், வரும் 19ம் தேதி நடக்க உள்ள, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில், வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை, 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் - 2023' நடக்க உள்ளன.
போட்டிகளில், 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 6,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங் கனையர், 1,600 பயிற்சியாளர்கள், 1,000 நடுவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு, 27 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், காட்சி விளையாட்டுகளில் இடம் பெற்றுள்ளது.
போட்டிகளின் துவக்க விழா, வரும் 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடக்க உள்ளது.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.
விழாவில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.