ஏப்.,6ல் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்
ஏப்.,6ல் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்
ADDED : மார் 27, 2025 12:24 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்.,6ல் திறக்கப்பட உள்ளது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரயிலை துவக்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயிலில் வந்த ஆர்.என்.சிங், ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால் அதற்கான நிகழ்ச்சிகள் குறித்து பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிகமாக அமைத்த மேடையில் நின்றபடி ரயில் பாலத்தை திறந்து மூடுதல் மற்றும் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் பாலத்தை கடந்து சென்றதை பார்வையிட்டார். முன்னதாக ஆர்.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
ராமநவமியான ஏப்.,6ல் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று தாம்பரம் டூ ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்கிறார். பழைய ரயில் துாக்கு பாலம் பலமிழந்ததால் இனிமேல் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வராது.
இதனை பராமரிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். ராமேஸ்வரம் டூ தனுஷ்கோடி ரயில் போக்குவரத்திற்கு பாதை அமைப்பது குறித்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் இத்திட்டம் துவக்கப்படவில்லை என்றார்.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா, ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி., ஈஸ்வர ராவ் உடன் இருந்தனர்.