தூத்துக்குடியில் ரூ.4,800 கோடிக்கு திட்டங்கள்; துவக்கி வைத்தார் பிரதமர்
தூத்துக்குடியில் ரூ.4,800 கோடிக்கு திட்டங்கள்; துவக்கி வைத்தார் பிரதமர்
UPDATED : ஜூலை 26, 2025 08:11 PM
ADDED : ஜூலை 26, 2025 07:40 PM

தூத்துக்குடி: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, தூத்துக்குடியில் நடந்த விழாவில் 550 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், 4,250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று இரவு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மோடிக்கு, திருவள்ளுவர் சிலையினை தங்கம் தென்னரசு பரிசாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய கட்டடத்தை துவக்கி வைத்தார்.
மொத்தம், 17,340 சதுர மீட்டரில், நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ஆண்டுக்கு, 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் உடையது. இதனால், தென்மாவட்டங்களில், சுற்றுலாவும், முதலீடும் அதிகரிக்கும்.
பின்,விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில்,
2,350 கோடி ரூபாய் செலவில், 50 கி.மீ., நீளத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் நான்கு வழிச்சாலை;
200 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துாத்துக்குடி துறைமுக சாலையின் ஆறு வழிப்பாதை போன்றவற்றை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், 285 கோடி ரூபாயில், ஆண்டுக்கு, 69 லட்சம் டன் சரக்குகளை கையாளும் திறனில் அமைக்கப்பட்டுள்ள, வடக்கு சரக்கு தளவாட நிலையம் - 3ஐயும் திறந்து வைத்தார்.
மதுரை - தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் ரயில் பாதையில், 90 கி.மீ., மின்மயமாக்கல் பணி; நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி பிரிவின் 21 கி.மீ., இரட்டைப் பாதை, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு 12.87 கி.மீ., மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம், 3.6 கி.மீ., பிரிவுகளின் இரட்டை பாதைப்பணி 1,165 கோடி ரூபாயில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும் தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் இருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மின் வழித்தட பணிக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திட்டச்செலவு, 550 கோடி ரூபாய்.
துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்த பின், திருச்சி செல்லும் பிரதமர் மோடி, இரவு அங்கு தங்குகிறார். நாளை அரியலுார் கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் அவர், முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில், நினைவு நாணயம் வெளியிடுகிறார். சோழபுரம் கோவிலில் நடக்கும், ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். பிறகு திருச்சியில் இருந்து டில்லி செல்கிறார்.