பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்
பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்
ADDED : ஏப் 04, 2025 05:03 AM

சென்னை: ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தொகுதி என்ற பாகுபாடு இல்லாமல், முதல்வர் ஸ்டாலின் செயல்படுவதாக, பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ம.க., - சதாசிவம்: மேட்டூர் தொகுதியில் வழங்க, 1,500 பட்டாக்கள் தயாராக உள்ளன. பட்டா கேட்டு காத்திருப்பு பட்டியலில், 1,000 பேர் உள்ளனர். நடப்பாண்டில், 5 லட்சம் பட்டா வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் எப்படி, 5 லட்சம் பட்டாக்கள் வழங்க முடியும்?
அமைச்சர் ராமச்சந்திரன்: 12 மாதங்கள் இருக்கிறதே. கும்மிடிப்பூண்டியில், 50,000 பட்டாக்களை, முதல்வர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார். எனவே, ஒரே ஆண்டில், 5 லட்சம் பட்டாக்கள் வழங்க முடியும். மேட்டூர் தொகுதியில் பட்டா வழங்கப்படவில்லை என்றால், அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். அதைச் சொன்னால் தீர்வு காணப்படும்.
சதாசிவம்: சேலம் மாவட்டத்தை மூன்றாகவும், கடலுார், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களை இரண்டாகவும் பிரிக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசின் சார்பில் கார் வழங்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் ஏரிகளுக்கு நீர் செல்ல, 'சரித்திர நாயகன்' முன்னாள் முதல்வர் பழனிசாமியால், 525 கோடி ரூபாயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவரை, சரித்திர நாயகன் என்கிறார். ஆனால், அமைச்சர்களை சொன்னாரு என்கிறார் சதாசிவம். எனவே, அவர் சொன்னதெல்லாம் நிச்சயமாக வராது.
சதாசிவம்: மேட்டூர் அணை கட்டப்பட்டதால், மேட்டூர் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு தண்ணீர் இல்லை. எனவே, மேட்டூர் உள்ளிட்ட சேலம் மாவட்ட மக்களுக்கு ஆண்டுக்கு இரண்டு டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும் திட்டத்தை, மூத்த அமைச்சர் துரைமுருகன் காலத்திலேயே செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: வெறுமனே மூத்த அமைச்சர் என்று சொன்னால் போதாது. எதிர்க்கட்சி தலைவரை பாராட்டியது போல, எங்களையும் சொன்னால் தான் நடக்கும்.
சதாசிவம்: அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்தேன்; அதை ஏற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினை மூன்று முறை நேரில் சந்தித்தேன்.
எனது மனுவை வாங்கி, எழுந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்று பார்க்காமல், மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தார். அதற்காக அவருக்கு நன்றி. இவ்வாறு விவாதம் நடந்தது.