எல்லாத்துக்கும் எதிர்ப்பு, இதற்கு மட்டும் ஆதரவா? தமிழக அரசு மீது அன்புமணி 'டவுட்'
எல்லாத்துக்கும் எதிர்ப்பு, இதற்கு மட்டும் ஆதரவா? தமிழக அரசு மீது அன்புமணி 'டவுட்'
ADDED : செப் 28, 2024 01:00 PM

சென்னை: மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் தமிழக அரசு, கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மட்டும் கண்களை மூடிக் கொண்டு ஆதரிப்பதன் மர்மம் என்ன என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறி உள்ளதாவது; கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1,144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அணு உலைகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு அருகிலேயே அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசு துடிப்பதும், அதற்கு தமிழக அரசு ஓடோடிச் சென்று அனுமதி கொடுப்பதும் கண்டிக்கத்தக்கவை.
சுரங்கத்தில் இருந்து மொத்தம் 59.88 மில்லியன் டன் அளவுக்கு மோனசைட் உள்ளிட்ட பல்வேறு அணுக்கனிமங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கொண்டு 40 ஆண்டுகளுக்கு ஆலையை இயக்க முடியும். கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசின் சுரங்கத்துறையும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளன.
அடுத்தக்கட்டமாக சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி கோரி மத்திய அரசு அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு எடுத்து அனுமதி அளிக்க வேண்டும். இந்த அனுமதி கிடைத்து விட்டால் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்கும் பணிகள் தொடங்கி விடும்.
சுரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதற்காகவே வரும் அக்டோபர் 1ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்துவதாக இருந்தது. உள்ளூர் திருவிழாக்கள் காரணமாக இந்தக் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், எந்த நேரமும் நடத்தப்பட்டு, அணுக்கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு நடந்தால், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும். அணுக்கதிர்வீச்சு தொடர்பான தீயவிளைவுகளும் ஏற்படும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாதது.
மத்திய அரசின் திட்டங்கள் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மட்டும் முந்திக் கொண்டு ஆதரவளிப்பதன் மர்மம் என்ன? தென் மாவட்ட மக்கள் மீதான தி.மு.க., அரசின் அக்கறை இவ்வளவு தானா?தமிழகத்தின், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்வதுடன், சுற்றுச்சூழல் அனுமதிக்காக நடத்தப்படவிருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் அற்த அறிக்கையில் கூறி உள்ளார்.