sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு; முக்கிய கோரிக்கை விடுத்த அன்புமணி

/

சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு; முக்கிய கோரிக்கை விடுத்த அன்புமணி

சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு; முக்கிய கோரிக்கை விடுத்த அன்புமணி

சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு; முக்கிய கோரிக்கை விடுத்த அன்புமணி

3


ADDED : மார் 24, 2025 04:39 PM

Google News

ADDED : மார் 24, 2025 04:39 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் சென்னையை அடுத்த வானகரம் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களை மேலும் பாதிக்கும் வகையில் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 78 சுங்கச் சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தபடவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.

2008ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் தான் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறி வரும் போதிலும், சுங்கக் கட்டணத்தை உயர்த்த எந்தவிதமான நியாயமும் இல்லை.

எந்த ஒரு கட்டமைப்பின் பயன்பாட்டுக்கான கட்டணமும் அதன் வரவு, செலவு மற்றும் லாப, நட்டக் கணக்குகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் அறமோ, நியாயமோ அல்ல.

தமிழகத்திலுள்ள பல சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பல சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீட்டை விட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு விட்ட பிறகும் அங்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், முதலீட்டுக்கான வட்டி, பரமாரிப்பு செலவுகள் போன்றவற்றை அதிகரித்துக் காட்டியும், சுங்கக் கட்டண வசூலைக் குறைத்துக் காட்டியும் மோசடிகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன?

அவற்றின் மூலம் எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலாகியிருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், எந்த பயனும் ஏற்படவில்லை.

பார்லிமெண்டில் கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி மக்களவை உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும்.

கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை.

டில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும்; அதற்கு முன்பாகவே சுங்கக்கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை என்ன?

கடந்த காலங்களில் இல்லாத வகையில் 2023-24ம் ஆண்டில் சுங்கக்கட்டண வசூல் 35% உயர்ந்து ரூ.64 ஆயிரத்து 810 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2019-20ம் ஆண்டில் ரூ.27,503 கோடியாக இருந்த சுங்கக்கட்டண வசூல், கடந்த 4 ஆண்டுகளில் 135% அதிகரித்திருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்தி வருவது அநீதியாகும். எனவே, புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us