குப்பை தொட்டிக்குதான் போகும் ராமதாஸ் கடிதம் பற்றி பா.ம.க., பாலு கருத்து
குப்பை தொட்டிக்குதான் போகும் ராமதாஸ் கடிதம் பற்றி பா.ம.க., பாலு கருத்து
ADDED : ஆக 14, 2025 03:38 AM
சென்னை,:''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய கடிதம், குப்பை தொட்டிக்குத் தான் செல்லும்,'' என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி:
ஆக., 9ம் தேதி, பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன் தலைமையில் நடந்த பொதுக்குழு, 100 சதவீதம் சட்டப்பூர்வமானது. பொதுக்குழுவின் முடிவுகளை, முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க இருக்கிறோம்.
ஆக., 17ம் தேதி கூட்டப்பட உள்ள பொதுக்குழுவுக்கு, எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை. ராமதாஸ் கூட்டம் நடத்தலாம்; பொதுக்குழுவை நடத்த முடியாது. பொதுக்குழுவை கூட்ட, கட்சி தலைவர், பொதுச்செயலருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சார்பில், அவரது உதவியாளர் சுவாமிநாதன், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ராமதாஸ் நற்பெயரை, கவுரவத்தை சீர்குலைக்கும் வகையில், குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல், இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு ராமதாஸ் ஒப்புதல் பெறப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. பா.ம.க., பெயரை தவறாகப் பயன்படுத்தி, யார் கடிதம் எழுதினாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன்னை தானே தலைவராக அறிவித்துக் கொண்டார்' என, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தை பரிசீலித்தால், குப்பை தொட்டிக்குத் தான் செல்லும்.
பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க., தலைமை நிர்வாகிகள், மூன்று எம்.எல்.ஏ.,க்கள், 108 மாவட்டச் செயலர்களில் 102 பேர், 3,800 பொதுக்குழு உறுப்பினர்களில், 3,640 பேர் என, ஒட்டுமொத்த நிர்வாகிகள் அன்புமணியோடு இருக்கின்றனர்.
சென்னை, தி.நகரில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட மொத்த கட்சியும் அன்புமணியிடம் தான் உள்ளது. இதில், ராமதாஸ் உரிமைக் கோர எதுவும் இல்லை.
இவ்வாறு கூறினார்.