ADDED : ஜூன் 05, 2025 03:04 AM

சென்னை: பா.ம.க., பொதுக்குழுவை கூட்ட தயாராகி வரும் ராமதாஸ், அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலர்களை தொடர்ந்து நீக்கி, புதியவர்களை நியமித்து வருகிறார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
புது நியமனம்
பா.ம.க.,வில், 108 மாவட்டச் செயலர்கள், 108 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். ஆனால், ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில், 13 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், மாநிலப் பொருளாளர் மற்றும் மாவட்டச் செயலர்கள் சிலரை நீக்கிவிட்டு. புதியவர்களை நியமித்தார். அதற்கு பதிலளித்த அன்புமணி, 'பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குதான், கட்சி நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உள்ளது.
'எனவே, ராமதாசால் நீக்கப்பட்டவர்கள், அதே பொறுப்பில் தொடர்வர்' என்று அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர், தென்சென்னை, வேலுார், மதுரை, ராமநாதபுரத்திற்கு புதிய மாவட்டச் செயலர்களை, ராமதாஸ் நியமித்து உள்ளார்.
பொதுக்குழுவில் தனது பலத்தை அதிகரிக்கும் வகையிலேயே, அன்புமணி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருவதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
முக்கிய அறிவிப்பு
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், வியாழக்கிழமைதோறும் ராமதாஸ் பேட்டியளித்து வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை அளித்த பேட்டியில், 'தலைமைப்பண்பு இல்லாதவர்' என, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை, ராமதாஸ் முன்வைத்தார்.
அதேபோல், இன்று வியாழக்கிழமை முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சியின் பொதுக்குழு கூடி மூன்றாண்டுகளை கடந்து விட்ட நிலையில், மீண்டும் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவெடுத்துள்ளார்.
விரைவில் பொதுக்குழுவை கூட்டவிருக்கும் ராமதாஸ், அதன் வாயிலாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்கு பொதுக்குழுவின் அங்கீகாரம் பெறவும் திட்டமிட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
இதற்கிடையில், ராமதாஸின் எந்த முயற்சியையும் எதிர்த்து முறியடிக்க, தன்னுடைய ஆதரவாளர்களை முழு வேகத்தில் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் அன்புமணி, என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.