ADDED : டிச 04, 2025 05:42 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, பா.ம.க., தலைவர் அன்புமணி ஆதரவு நிர்வாகிகள், நேற்று இரவு சந்தித்து பேசினர்.
பா.ம.க., செய்தித் தொடர்பாளர் பாலு, இளைஞரணித் தலைவர் கணேஷ்குமார், பசுமை தாயகம் நிர்வாகி ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர், நேற்று பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இது குறித்து பாலு கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி, வரும் 17ம் தேதி, சென்னையில் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்க, ஆளும் தி.மு.க., தவிர, மற்ற அரசியல் கட்சிகளுக்கு, அழைப்பு விடுக்க இருக்கிறோம். தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க இருக்கிறோம்.
அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, 17ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தோம்; எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
சந்திப்பின்போது, சட்டசபை தேர்தலில் இணைந்து செயல் படுவது குறித்து பழனிசாமியிடம் பேசியுள்ளனர்.

