பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இப்போது குழந்தை! கன்ட்ரோல் 3 பேர் கையில் என்கிறார் அன்புமணி
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இப்போது குழந்தை! கன்ட்ரோல் 3 பேர் கையில் என்கிறார் அன்புமணி
ADDED : ஜூன் 29, 2025 02:32 AM

சென்னை: ''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வயது முதிர்வு காரணமாக தற்போது குழந்தை போல மாறி விட்டார். அவர் மூன்று பேர் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக அவரை இயக்கி வருகின்றனர்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ம.க.,வின் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம், சோழிங்கநல்லுாரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில் அன்புமணி பேசியதாவது:
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், பா.ம.க., தலைவராக பொறுப்பேற்கும்படி, ராமதாஸ் என்னிடம் கூறினார். அவருக்கு பிறகே தலைவராக வேண்டும் என்பதால் மறுத்தேன்.
ஐந்தாண்டுகளாக, ராமதாஸ் பழைய ஆளாக இல்லை. அவர் எப்போதும் போல இருந்திருந்தால், எதைச்சொல்லி இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு செய்திருப்பேன்.
பயிர் எது, களை எது?
மகனாகவும், டாக்டராகவும் சொல்கிறேன். வயது முதிர்வால், ராமதாஸ் குழந்தை போல மாறிவிட்டார். அவருடன் இருக்கும் மூன்று பேர், தங்களின் சுய லாபத்திற்காக, அவரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த உண்மை தெரிந்த பிறகே, பா.ம.க., தலைவராக சம்மதித்தேன்.
கட்சியில் பயிர் எது, களை எது என, இப்போது தான் தெரிகிறது. பா.ம.க.,வை பொறுத்தவரை, கட்சி தலைவரான எனக்கே முழு அதிகாரம் உள்ளது. கட்சியினரில், 90 சதவீதம் பேர் என் பக்கம் உள்ளனர்.
பா.ம.க., சட்ட விதிகளில், கட்சியின் நிறுவனர் வழிகாட்டுதலின்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தான் உள்ளது. கட்சி விதிகளில், நிறுவனருக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவை கூட்ட தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் என, மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
கட்சியில் பொறுப்பு கொடுக்கிறேன் என, கொலை செய்தவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் என்று, குற்றப் பின்னணி உடையோருக்கு நியமன கடிதம் கொடுக்கிறார்.
யாரை கூட்டி வந்து பொறுப்பு கொடுங்கள் என்றாலும், அதில் கையெழுத்து போடுகிறார். பொதுச்செயலராக, 36 வயதானவரை நியமிக்கிறார். இது எல்லாம் ராமதாஸ் சிந்தனையில் நடக்கவில்லை.
ராமதாஸ் பேசுவது அனைத்தும் பொய். நான் பேசாமல் இருப்பதால், அவர்களின் கருத்து மட்டுமே மேலோங்குவது போல தோன்றுகிறது. உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும்.
மாமனா, மச்சானா?
ராமதாஸ் யாருடன் கூட்டணி வைக்கச் சொல்கிறாரோ, அவர்களிடம் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி பேசி வருகிறேன். பிரதமர் மோடி, அமித் ஷா, சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி என, பல்வேறு தலைவர்களிடம் கூட்டணி பேசி உள்ளேன்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ராமதாஸ் சொல்லியே, பா.ஜ.,வுடன் கூட்டணி பேசினேன். அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என, அப்போதே அவர் சொல்லி இருந்தால், வேண்டாம் என்று சொல்லியிருக்க மாட்டேன்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, அவர்கள் எனக்கு மாமனா, மச்சானா. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து சென்ற பின், அதுகுறித்து ராமதாஸிடம் கேட்டேன். பத்திரிகை வைக்க வந்ததாக கூறினார்.
பா.ஜ., கூட்டணி அமைக்க, ராமதாஸ் சம்மதித்ததால், அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் தைலாபுரம் வீட்டிற்கு வந்தனர்.
ஆனால், இப்போது இல்லை என்று மறுக்கிறார். பா.ஜ.,வுடன் பேசி முடித்த பின், எனக்கே தெரியாமல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடந்தது.
வி.சி., - காங்கிரஸ் கட்சியினர், ராமதாஸ் மீது திடீரென பாசமழை பொழிகின்றனர். வி.சி., தலைவர் திருமாவளவன், பொதுச்செயலர் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் ஆகியோர், திடீரென அவரை புகழ்ந்து பேசுகின்றனர்.
இவ்வளவு காலம் இல்லாமல், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ராமதாஸை சந்திக்கிறார். இதெல்லாம், தி.மு.க.,வின் சூழ்ச்சி என்பதை பா.ம.க.,வினர் புரிந்துகொள்ள வேண்டும்.
பா.ம.க.,வின் எதிரி தி.மு.க.,தான். தி.மு.க.,வுக்கு எதிராகவே நாம் பிரசாரம் செய்ய வேண்டும். சமூக வலைதளங்களில் ராமதாஸ் மீது, கட்சி யினர் எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. இவ்வாறு அன்புமணி பேசினார்.