பா.ம.க., பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம்: மவுனம் கலைத்தார் ராமதாஸ்!
பா.ம.க., பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம்: மவுனம் கலைத்தார் ராமதாஸ்!
UPDATED : ஜன 02, 2025 01:58 PM
ADDED : ஜன 02, 2025 12:18 PM

விழுப்புரம்: 'பா.ம.க., பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம். அன்புமணி உடன் கருத்து வேறுபாடு இல்லை. அவரிடம் பேசி சரியாகிவிட்டது' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சமீபத்தில் புதுச்சேரி அருகே நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், மேடையிலேயே அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்ததுக்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் 'நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் உருவாக்கிய கட்சி இது,'' என்று அழுத்தமாக ராமதாஸ் இரண்டு முறை கூறினார். வாக்குவாதம் நடந்த மறுநாள், ராமதாஸை சந்தித்து அன்புமணி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், இன்று (ஜன.,02) ராமதாஸ் கூறியதாவது: பொதுக்குழு நடக்கும் போது ஊடக நண்பர்களை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். பா.ம.க., பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம். அன்புமணி உடன் கருத்து வேறுபாடு இல்லை. அன்புமணி வந்து என்னை சந்தித்து பேசினார். அந்த பிரச்னை எல்லாம் சரியாகிவிட்டது. பா.ம.க., இளைஞரணி தலைவராக முகுந்தனை பொதுக்குழுவில் அறிவித்து விட்டோம்.
அவருக்கு மறுநாளே நியமன கடிதமும் கொடுத்து விட்டேன். பொதுக்குழுவில் நடந்த பிரச்னை, கட்சி வளர்ச்சியை பாதிக்காது. பா.ம.க., கட்சி ஆரம்பித்த காலக்கட்டத்தில் இருந்து என்னை விமர்சியுங்கள் என்று சொல்கிறேன். என்ன வேண்டுமானால் விமர்சிக்கலாம் என்று சொல்வேன். கடிதம் வாயிலாக கூட தவறு என்று எழுதுங்கள் என்று சொல்வேன். எந்த கூட்டமாக இருந்தாலும் என்னை விமர்சியுங்கள். நான் கோபம் எல்லாம் பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

