sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தீபாவளிக்கு தனியார் பஸ்கள் வாடகையா! ரொம்ப ஆபத்துங்க! எச்சரிக்கும் அன்புமணி

/

தீபாவளிக்கு தனியார் பஸ்கள் வாடகையா! ரொம்ப ஆபத்துங்க! எச்சரிக்கும் அன்புமணி

தீபாவளிக்கு தனியார் பஸ்கள் வாடகையா! ரொம்ப ஆபத்துங்க! எச்சரிக்கும் அன்புமணி

தீபாவளிக்கு தனியார் பஸ்கள் வாடகையா! ரொம்ப ஆபத்துங்க! எச்சரிக்கும் அன்புமணி

4


ADDED : அக் 22, 2024 02:16 PM

Google News

ADDED : அக் 22, 2024 02:16 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தீபாவளிக்காக தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கும் நடவடிக்கை ரொம்ப ஆபத்தான ஒன்று. தமிழக அரசு இதை கைவிட வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது;

தீபாவளி திருநாளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பஸ்களுக்கு கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகை வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். இது மிகவும் ஆபத்தான முயற்சி. தனியார் மயத்துக்கு வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

விடுமுறைகள் மற்றும் திருவிழாக் காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் தேவைக்காக சிறப்புப் பஸ்களை இயக்குவதற்காக தனியார் பஸ்களை பயன்படுத்தப்போவதாக தமிழக அரசு கடந்த மாதமே அறிவித்திருந்தது. அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த செப்டம்பர் 19ம் தேதி இறுதி செய்யப்படுவதாக இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே இந்தத் திட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.

ஆனால், தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆயுத பூஜை விடுமுறையின் போது தனியார் பஸ்களை குறைந்த எண்ணிக்கையில் வாடகைக்கு எடுத்து இயக்கிய அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இப்போது தீபாவளிக்காக அதிக எண்ணிக்கையில் தனியார் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மக்கள் வசதிக்காக என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தனியார் பஸ்களை அரசின் சார்பில் இயக்குவதை அனுமதிக்க முடியாது. நெரிசல் காலங்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குத் தேவையான பஸ்கள் அரசிடம் இல்லை என்பதால், தனியார் பஸ்கள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும்.

அந்த பஸ்களை தனியார் நிறுவனத்தின் ஓட்டுநரே இயக்குவார். அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநர் மட்டும் அதில் பணியாற்றுவார். தனியார் பஸ்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில், ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், இதை தனியார்மயம் என்று கூற முடியாது என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.

அரசுத் தரப்பில் கூறப்படும் இந்த காரணங்களும், விளக்கங்களும் அப்பட்டமான பொய் ஆகும். மொத்த செலவு ஒப்பந்த முறையில் (Gross Cost Contract) தான் இயக்கப்படவுள்ளன. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பஸ்களில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தக்கட்டமாக ஏற்கெனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பஸ்களை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் போது, புதியவற்றை வாங்காமல் தனியார் பஸ்கள் இதே முறையில் திணிக்கப்படும்.

அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் போதிய பஸ்கள் இல்லை என்பதால் தான் தனியார் பஸ்களை இயக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது. தனியார் பஸ்களை போக்குவரத்துக் கழகங்களில் திணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 8182 புதிய பஸ்களை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரசு நினைத்திருந்தால் அந்த பஸ்களை எப்போதோ வாங்கியிருக்கலாம். ஆனால், மூன்றரை ஆண்டுகளில் 1088 புதிய பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டன. மீதமுள்ள பஸ்களை குறித்த காலத்தில் வாங்க முடியாத அளவுக்கு தமிழக அரசை தடுத்தது யார்?

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு காலாவதியான பஸ்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்குக் கூட புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒப்பந்தப் பணியாளர்களை மட்டும் அரசு நியமித்திருக்கிறது.

இவை அனைத்தும் தனியார்மயமாக்கத்திற்கான முன்னேற்பாடுகள் தான். மிகக்குறைந்த எண்ணிக்கையில் புதிய பஸ்களை வாங்குவதையும், சில நூறு பணியாளர்களை மட்டும் நியமிப்பதையும் சுட்டிக்காட்டி அரசுப் போக்குவரத்துக் கழங்கள் தனியார்மயமாக்கப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுவதை எவரும் நம்ப மாட்டார்கள்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கணிசமான அளவில் நிதியை ஒதுக்கி தேவையான அளவுக்கு புதிய பஸ்களை வாங்குவதுடன், புதிய பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.

பயணிகள் சேவையையும், நிர்வாகத்தையும் மேம்படுத்துவதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களை ஒப்பந்தம் செய்யும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us