
ஆம்னி பஸ் டிரைவர் கைது விழுப்புரம்: கேரளாவில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம், பாளையம்பட்டியை சேர்ந்த டிரைவர் ஞானவேல், 40, பஸ்சை ஒட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பஸ் வந்தபோது, ஞானவேல், மாற்று டிரைவரிடம் பணியை ஒப்படைத்துவிட்டு, ஓய்வெடுக்க சென்றார்.
ஓய்வெடுக்கும் பகுதி அருகே சீட்டில் துாங்கிய, 9 வயது சிறுமிக்கு, ஞானவேல் பாலியல் தொல்லை கொடுத்து, அவரது மொபைல் போனில் சிறுமியை படம் எடுத்தார். இது குறித்த புகாரில், விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பயணியருடன் பஸ் கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில், டிரைவரின் மொபைல் போனை வாங்கி பார்த்தபோது, அவர் சிறுமியை படம் எடுத்தது தெரிந்தது. போலீசார், ஞானவேலை போக்சோவில் கைது செய்தனர்.
சில்மிஷ ஆசிரியர் பணிநீக்கம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணியார்பாளையத்தில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சில மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது புகார் எழுந்தது.
விசாரணையில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் தனபால், ஜூலை 27ல் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆசிரியர் ராஜவேல், 53, பகுதி நேர ஆசிரியர் தேவேந்திரன், 40, ஆகியோரும் மாணவியருக்கு தொல்லை அளித்தது தெரிந்தது.
கள்ளக்குறிச்சி போலீசார், போக்சோ சட்டத்தில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து, ராஜவேல், தேவேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில், பகுதி நேர ஆசிரியர் தேவேந்திரன் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார்.
'விஷம' தாத்தாவுக்கு 'காப்பு' வேலுார்: வேலுாரை சேர்ந்தவர் பாஸ்கரன், 60. இவர், நேற்று முன்தினம் தன், 5 வயது பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுது கொண்டே தாயிடம் கூறியுள்ளார். வேலுார் மகளிர் போலீசில் நேற்று தாய் புகார் அளித்தார். போலீசார், போக்சோவில் பாஸ்கரனை கைது செய்தனர்.