பண்ணை, தனி வீடுகள் கணக்கெடுப்பு குற்றங்கள் தடுக்க போலீஸ் நடவடிக்கை
பண்ணை, தனி வீடுகள் கணக்கெடுப்பு குற்றங்கள் தடுக்க போலீஸ் நடவடிக்கை
ADDED : ஜன 19, 2025 12:30 AM
சேலம்:தமிழகத்தில் சில மாதங்களாக பாலியல் துன்புறுத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் அதிகரித்து, சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பண்ணை வீட்டில், நவ., 29ம் தேதி மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
தோட்டத்து வீடுகள், தனி வீடுகளில் வசித்து வந்த வயதானவர்களை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இதனால் தமிழகம் முழுதும், குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும், டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பூட்டிய வீடுகளை கண்காணித்தல், தொடர்ந்து குற்றங்கள் நடக்கும் பகுதிகளில் ரோந்து மேற்கொள்ளுதல், பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்தல், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.
மாநிலம் முழுதும் ஓரிரு வீடுகள் உள்ள பகுதி, பண்ணை வீடு உள்ள பகுதி, தீவிர கண்காணிப்பு தேவைப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாதிரியான வீடுகளை கணக்கெடுத்து, ரோந்து மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீடுகள், தனியே உள்ள வீடுகளை, போலீஸ் துறை வாயிலாக கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்கு ஒவ்வொரு ஸ்டேஷன்களில், இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியே உள்ள வீடுகள், அந்த வீடுகளுக்கு செல்லும் வழியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா என, ஆய்வு செய்யப்படுகிறது.
முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. பண்ணை வீடு, தனி வீடுகளில் வசிப்போருக்கு, அவசர உதவி எண்கள் குறித்தும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.
இதே போல, அனைத்து மாவட்ட போலீசாரும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

