கைதிகளை தொடர் குற்றவாளியாக்குவது போலீஸ் தான்: நீதிபதிகள் குற்றச்சாட்டு
கைதிகளை தொடர் குற்றவாளியாக்குவது போலீஸ் தான்: நீதிபதிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜன 25, 2025 12:56 AM
சென்னை:'இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து, உலக அளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உட்பட, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், 45, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், 'சிறை அதிகாரிகளை எதிர்த்து கேள்வி கேட்டேன். அதற்கு பழிவாங்கும் விதமாக, சிறை அதிகாரிகள் கடுமையாக அடித்து கொடுமைப்படுத்துகின்றனர்' என்று கூறியிருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
பின், நீதிபதிகள் கூறியதாவது:
புனைப்பெயர்கள் இல்லாமல், கைதிகளின் பெயரை காவல்துறை ஏன் பதிவு செய்வது இல்லை? கைதிகளை தொடர் குற்றவாளிகளாக போலீசார் தான் உருவாக்குகின்றனர்.
புனைப்பெயர்களுக்கு பதிலாக, தந்தையின் பெயரை இணைத்து பயன்படுத்தலாம். சிறையில் வைக்கப்படும் புனை பெயர்களால், விடுதலைக்கு பிறகு சிறு தண்டனை பெற்ற கைதிகள், பெரிய குற்றவாளிகளாக உருவாகின்றனர்.
கைதிகளை திருத்தும் இடமான சிறைச்சாலை, அவர்களை தீவிர குற்றவாளிகளாக மாற்றும் இடமாக செயல்படுகிறது. 'இனிமேல் சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் பெயர்களுக்கு முன்னால் உள்ள புனைப்பெயர்களை நீக்குங்கள்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
ஊழல் தான் தற்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. சாதாரண மக்கள் போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் செல்லவே பயப்படுகின்றனர். எல்லா பணிகளுக்கும், லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மக்களை நிர்பந்திக்கின்றனர்.
'அரசு அலுவலகங்களில் ஊழல் இல்லை' என, தமிழக அரசு, நீதிமன்றத்துக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா? லஞ்சம் வாங்குவோரை தவறாக பார்த்த காலம் மாறி, லஞ்சம் வாங்காதவர்களை, இப்போது தவறாக பார்க்கும் காலமாகி விட்டது.
சான்றிதழ்கள் பெற, 'ஆன்லைன்' வசதிகள் உள்ளன. ஆனாலும், அந்த விண்ணப்பத்தை நிராகரித்து, லஞ்சம் வாங்குவதற்காக, மக்களை அதிகாரிகள் நேரில் வரச் செய்கின்றனர்.
'ஆன்லைன்' வாயிலாக வசதிகளை பெற முடியாத மக்கள், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தே சான்றிதழ்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கொடுமை
இரும்பை முதல் முறையாக பயன்படுத்தியது தமிழகம். இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து, உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
வழக்கில் வீடியோ கான்பரன்சில் ஆஜரான போலீஸ் பக்ருதீன், ''என்னை தனிமை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் நடந்த கொடுமையை, நீதிமன்றத்தில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என, சிறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர்,'' என்றார்.
இதையடுத்து, வழக்கை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று போலீஸ் பக்ருதீனை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

