sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆளுங்கட்சியின் குற்றவாளியை தப்பிக்க வைக்க காவல்துறை செயல்படுகிறது: பழனிசாமி காட்டம்

/

ஆளுங்கட்சியின் குற்றவாளியை தப்பிக்க வைக்க காவல்துறை செயல்படுகிறது: பழனிசாமி காட்டம்

ஆளுங்கட்சியின் குற்றவாளியை தப்பிக்க வைக்க காவல்துறை செயல்படுகிறது: பழனிசாமி காட்டம்

ஆளுங்கட்சியின் குற்றவாளியை தப்பிக்க வைக்க காவல்துறை செயல்படுகிறது: பழனிசாமி காட்டம்

6


ADDED : டிச 28, 2024 03:56 AM

Google News

ADDED : டிச 28, 2024 03:56 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; இதனால், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின், பழனிசாமி அளித்த பேட்டி:

அண்ணா பல்கலை வளாகத்தில், 23ம் தேதி இரவு 7:45 மணியளவில், அங்கு படிக்கும் மாணவர் மற்றும் மாணவி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் என்பவர், மாணவரை அடித்து விரட்டியுள்ளார். மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

வெளிப்படுத்தவில்லை

அதை தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். அப்போது அவருக்கு ஒரு மொபைல் போன் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவரிடம், 'சார், சார்' என்று ஞானசேகரன் பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை, போலீசார் இதுவரை வெளிப்படுத்தவில்லை; அவர் யார் என்று தெரிய வேண்டும்.

இதுதொடர்பாக, போலீஸ் நிலையத்தில், அந்த மாணவி புகார் அளித்துள்ளார். ஞானசேகரன் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அப்படிப்பட்ட நபர், எப்படி சுதந்திரமாக அடிக்கடி கல்லுாரி வளாகத்தில் சுற்றித் திரிய முடிந்தது?

மாணவியருக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. பல்கலை வளாகத்தில், 70 'சிசிடிவி கேமரா'க்கள் உள்ளன. அதில் 56 மட்டுமே வேலை செய்வதாகக் கூறுகின்றனர்; இது வெட்கக்கேடானது.

'பல்கலை விசாரணை அமைப்பில் இருந்து புகார் வந்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது' என, போலீஸ் கமிஷனர் சொல்கிறார். ஆனால், 'போலீசில் புகார் செய்த பின்னரே, நடந்த சம்பவம் குறித்த விபரம் தெரியும்' என, அமைச்சர் கோவி.செழியன் சொல்கிறார்.

இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்த உண்மை நிலை தெரிய வேண்டும். ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என செய்தி வருகிறது. அதை மறைப்பதற்கு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

அமைச்சர்கள் பல காரணங்களை சொல்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரை தப்பிக்க வைக்க, காவல் துறை செயல்படுகிறதா என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.

பல்வேறு புகார்கள்

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கக்கூடாது. அதற்கு, சி.பி.ஐ.,தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இரண்டு, மூன்று மாதங்களாக சென்னையில் பல்வேறு பாலியல் புகார்கள் வந்துள்ளன.

சென்னை, அண்ணா நகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை.

இந்த வழக்கை தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் எடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு இல்லை

ஆக, குற்றம் செய்தோரை காப்பாற்றுவதற்கான காரியங்களை அரசே செய்வதால், துணிச்சலுடன் பலர் பாலியல் கொடுமையில் ஈடுபடுகின்றனர். காவல் துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு கிடையாது. குற்றவாளிகள் கொஞ்சம்கூட அச்சம் இல்லாமல் செயல்படுகின்றனர். வேலியே பயிரை மேய்கிறது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி விசாரிக்காமல், போலீஸ் கமிஷனர் சொன்னபடி போலீசார் விசாரிக்கின்றனர். இப்படி இருந்தால் விசாரணை எப்படி முறையாக நடக்கும்?

இதுதான் காவல் துறையின் நிலைமை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எப்.ஐ.ஆர்., வெளியானதாக சாக்குப்போக்கு சொல்கின்றனர். இந்த அரசை நம்பி, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வர மாட்டார்கள்.

தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. நிர்வாக சீர்கேடு அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, அது ரத்து செய்யப்பட்டது. வரும் 30ம் தேதி மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படும். கவர்னரை சந்தித்து மாநிலத்தில் நடக்கும் ஊழல்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து, இரண்டு முறை பேசிவிட்டோம். மீண்டும் அவரை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது. இதுகுறித்த பட்டியல் தயாரித்து ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கவர்னரை சந்தித்து பேசுவோம். குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் தப்பிக்க முடியாது.

- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,








      Dinamalar
      Follow us