மகரஜோதி தெரியும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு
மகரஜோதி தெரியும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு
ADDED : ஜன 09, 2024 02:56 AM

சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கான முன்னேற்பாடுகள் துவங்கின. போலீசார் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ந்து அதற்கேற்றார் போல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகளை தேவசம்போர்டும், போலீசும் துவங்கின. சபரிமலை சன்னிதானம் மட்டுமின்றி மகரஜோதி தெரியும் பம்பை ஹில்டாப், திருவேணி பெட்ரோல் பம்ப், திருவேணி பாலம், பம்பை பஸ் ஸ்டான்ட், சாலக்கயம், அட்டதோடு, அட்டத்தோடு மேற்கு காலனி, இலவுங்கல், நெல்லி மலை, அய்யன்மலை, பஞ்சிபாறை, ஆங்ங முழி ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் பணியில் அமர்த்தப்படுவர்.
ஜன.,15 ல் உச்ச பூஜை முடிந்து நடை அடைத்த பின் பக்தர்கள் 18 படிகளில் ஏற முடியாது. படிகளை கழுவி சுத்தம் செய்த பின் திருநீரால் துடைத்து தயார் செய்யப்படும். மாலை 6:30 மணிக்கு திருவாபுரணம் பவனி வந்ததும் திருவாபரணம் அணிவித்து தீபாராதனை நடைபெறும். அதன் பின்னரே பக்தர்கள் 18 படிகளில் ஏற முடியும்.
அன்று காலை 10:00 மணி முதல் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது. மாலையில் மகரஜோதி தரிசனம் முடிந்து பக்தர்கள் ஓரளவுக்கு பம்பை திரும்பிய பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்படுவார்கள்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மகரஜோதி தெரியும் ஜன., 15 மற்றும் 16 தேதிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களை அழைத்து வர வேண்டாம் என்று பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.