கோர்ட்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்: பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி., உத்தரவு
கோர்ட்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்: பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி., உத்தரவு
ADDED : டிச 23, 2024 05:29 AM

சென்னை : 'தமிழகம் முழுதும் நீதிமன்றங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
நெல்லையில் இரு தினங்களுக்கு முன், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற வாலிபர், நீதிமன்ற வாயிலில் ஏழு பேர் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதிருப்தி
இதுகுறித்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.
சமீபத்திய வழக்கு விசாரணையின் போது, பணி நேரத்தில் போலீசார், மொபைல் போனில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், 'தமிழகம் முழுதும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும், ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தை கருத்தில் வைத்து, இடைக்கால நடவடிக்கையாக, அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும், ஒரு எஸ்.ஐ., தலைமையில், இரண்டுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு குழுவை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.
நீதிமன்றங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.அங்கு பணியில் உள்ள எஸ்.ஐ.,க்கள், கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்.
பயன்படுத்தலாம்
பாதுகாப்பு குழுவில் ஒரு காவலர், வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட, 'லாங் ரேஞ்ச் வெப்பன்' எனப்படும், நீண்ட துாரத்தில் இருந்து சுடும் துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும்.
இவர்கள், சட்ட ரீதியாக தங்களின் உடல் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால், காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தலாம்.
நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்ட போலீசாருக்கு, வழக்குகளின் விபரம், பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் குறித்து கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும், யார் யார் மீதான வழக்குகள் நடக்கின்றன. அவர்கள் எப்போது நீதிமன்றங்களுக்கு ஆஜராக வருகின்றனர்.
அவர்களில் பழிக்கு பழி வாங்க துடிக்கும் நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.