மாணவியை பாலியல் வன்முறை செய்தது ஒருவரே போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்
மாணவியை பாலியல் வன்முறை செய்தது ஒருவரே போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்
ADDED : டிச 27, 2024 02:10 AM

சென்னை:''அண்ணா பல்கலை மாணவியை, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது ஒருவர் தான்,'' என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலை மாணவி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள், குற்றம் செய்த நபரை கைது செய்தோம்.
வழக்கு பதிவு
புலன் விசாரணையில், மாணவியை பாலியல் வன்முறை செய்தது ஒருவர் தான்; வேறு நபருக்கு தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மாணவி புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கக் கூடாது.
இவ்வாறான குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை, எந்த விதத்திலும் அடையாளப்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிடக்கூடாது.
காவல் துறைக்கு தரப்படும் புகாரில் கூறி இருக்கும் தகவல்களை, அப்படியே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும். அதில் நாங்கள் எவ்வித அடித்தல், திருத்தலும் செய்யக்கூடாது.
அந்த வகையில், மாணவி அளித்த புகாரில் கூறிய தகவல்கள், எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டன.
காவல் துறையில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை, சி.சி.டி.என்.எஸ்., எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகுதான், நீதிமன்றங்களுக்கு அனுப்ப வேண்டும்.
புகார்தாரருக்கும் ஒரு நகல் தர வேண்டும். எப்.ஐ.ஆரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது, பாலியல் தொடர்பான குற்றமாக இருந்தால், தானாகவே 'லாக்' ஆகிவிடும்.
இந்த எப்.ஐ.ஆர்., சில நிமிடங்கள் பார்க்கும்படி இருந்துள்ளது. அந்த சமயத்தில், யாரோ பதிவிறக்கம் செய்துள்ளனர். புகார்தாரர் தரப்பிலும், எப்.ஐ.ஆர்., வெளியில் வர நேர்ந்திருக்கலாம்.
எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம் தொடர்பாக, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிகவும் சென்சிட்டிவான விவகாரம் தொடர்பாக, இனி எவரும் எப்.ஐ.ஆர்., நகலை பரப்பக் கூடாது. மீறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்தேகம்
கைதான ஞானசேகரன், சம்பவ இடத்தில் மொபைல் போனை, 'ஏரோபிளேன் மோடில்' வைத்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில், 'சார்' என்ற வார்த்தை பயன்படுத்தி இருப்பதால், வேறு நபர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என, சந்தேகம் எழுப்பப்படுகிறது.
மாணவியை மிரட்டவே, ஞானசேகரன் அதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். அவர் மீது, 2013 - 2019 வரை, வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, 20 வழக்குகள் உள்ளன.
அதில், ஆறு வழக்கில் விடுதலை பெற்றுவிட்டார். இதற்கு முன், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வழக்கு எதுவும் இல்லை.
அவருக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் வகையில், ஏற்கனவே பதிவு செய்த எப்.ஐ.ஆரில், புதிய சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை வளாகத்தில், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த, 142 காவலாளிகள் பணியில் உள்ளனர். '70 சிசிடிவி'க்கள் உள்ளன. அவற்றில், 56 செயல்பாட்டில் உள்ளன.
அங்கு போலீஸ் ரோந்து பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து, பாராட்டும் விதமாக துணிச்சலாக புகார் அளித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் யார் பாதிக்கப்பட்டாலும், காலம் தாழ்த்தாமல் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.