ADDED : ஏப் 03, 2025 10:09 PM
புதுக்கோட்டை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது, கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நூறு நாள் வேலை திட்டத்துக்கு அளிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக தமிழகத்துக்கு தரவில்லை. ஆனால், இந்த விஷயத்தில், மத்திய அரசுக்கு ஆதரவாக கடந்த 30ல் பத்திரிகையாளர்களிடம் பேசினார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. அப்போது, தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
மேலும், தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் ஊழல் புரிந்துள்ளனர்; இப்படி தலைவனாக இருப்பவனையெல்லாம் பிடித்து, ஜெயிலில் வைக்க வேண்டும். இப்படி கைது செய்து ஜெயிலில் அடைத்தால், திஹார் ஜெயில் போல 4 ஜெயில்கள் கட்ட வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஊராட்சி மன்ற தலைவர்களை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியிருக்கிறார்.
இப்படிதான், அண்ணாமலை தவறான தகவல்களையும், தவறான புள்ளி விபரங்களையும் வைத்துக்கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் குறித்து பேசி வருகிறார். அவருடைய பேச்சு, ஊராட்சி தலைவர்களின் நன்மதிப்பை குலைப்பதோடு, நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலும் உள்ளது. அவருடைய பேச்சால் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

