நெற்றியில் விபூதி அழிப்பு; திருமா மீது போலீசில் புகார்
நெற்றியில் விபூதி அழிப்பு; திருமா மீது போலீசில் புகார்
ADDED : ஜூன் 21, 2025 02:49 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்த வி.சி., தலைவர் திருமாவளவன், அங்கு வந்த ஒரு தம்பதி, 'செல்பி' எடுக்க விருப்பம் தெரிவித்த போது, தனது நெற்றியில் பூசி இருந்த விபூதியை அழித்தார்.
இந்நிலையில், 'அகில பாரத அனுமன் சேனா' மாநில பொதுச்செயலர் ராமலிங்கம், நேற்று திருப்பரங்குன்றம் போலீசில் திருமாவளவன் மீது புகார் அளித்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக குழப்பங்கள் நிலவிய நிலையில், கடந்த மூன்று மாதங்களாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், வி.சி., தலைவர் திருமாவளவன் திடீரென திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கிருந்து திரும்பும்போது, கோவில் வளாகத்திற்குள்ளேயே பக்தர்கள் முன், தனது நெற்றியில் இருந்த விபூதியை அழித்து, ஹிந்துக்களின் மனம் புண்படும் விதமாக செயல்பட்டு உள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தை துாண்டும் வகையில், உள்நோக்கத்துடன் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறுகையில், “ஆறு மணி நேரமாக நெற்றியில் விபூதி இருந்ததாக, திருமாவளவன் பொய் கூறுகிறார். அதன்பிறகு, சிக்கந்தர் பள்ளிவாசல் தர்ஹாவுக்கு சென்று, மலை விவகாரத்தை பற்றி பேசுவதற்கு காரணம் என்ன? கோவில்களில் ஆபாச பொம்மைகள் உள்ளன என பேசும் அவருக்கு, கோவிலில் என்ன வேலை?” என கூறினார்.