மாவோயிஸ்ட் நடமாட்டம் வனப்பகுதிகளில் இல்லை காவல்துறை உறுதி
மாவோயிஸ்ட் நடமாட்டம் வனப்பகுதிகளில் இல்லை காவல்துறை உறுதி
ADDED : ஏப் 11, 2025 01:05 AM
சென்னை:'தமிழக, கேரள, கர்நாடக மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதியில், மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை' என, தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக, டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
மாவோயிஸ்ட் இயக்கத்தினர், முச்சந்திப்பு வனப்பகுதியில், 2013ல் ஆயுதங்களுடன் கண்டறியப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, தமிழகம், கேரள, கர்நாடக மாநிலங்கள் ஒருங்கிணைந்து, இடதுசாரி பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, 'சிறப்பு இலக்கு படை, சிறப்பு செயலாக்க குழு, நக்சல் எதிர்ப்பு படை அமைத்து, தேடுதல் வேட்டை நடத்தின.
தற்போது, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவின்படி, ஐ.ஜி., மயில்வாகனன் தலைமையில், கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், தமிழக நீலகிரி மாவட்டங்களில், இரண்டு வெவ்வேறு வனப்பகுதியில், கூட்டு வனத்தேடுதல் வேட்டை சமீபத்தில் நடந்தது.
அப்போது, மழைப்பொழிவும், ஆபத்தான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் காணப்பட்டன. ஆனாலும், தேடுதல் வேட்டை சிறப்பாக நடந்தது. தேடுதல் வேட்டையில், சந்தேகத்திற்கு இடமான இடதுசாரி பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து எல்லை பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.