கட்டுப்பாட்டை மீறிய துறையாக போலீஸ் துறை: பா.ஜ., குற்றச்சாட்டு
கட்டுப்பாட்டை மீறிய துறையாக போலீஸ் துறை: பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 04, 2025 01:42 AM
சேலம்: ''ஒழுங்கு, கட்டுப்பாட்டை மீறிய துறையாக போலீஸ் துறை உள்ளது,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.
சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பா.ஜ., - ஐ.டி., விங் நிர்வாகி பிரவீன் ராஜை சந்தித்த பின், அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., - ஐ.டி., அணி நிர்வாகியை, போலீசார் வீடு புகுந்து தாக்கி, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சமூக வலைதளத்தில், சாதாரண பதிவு போட்டதற்காக, ஒரு எஸ்.பி., இரு டி.எஸ்.பி., உட்பட பெரும் போலீஸ் படையே, அவர் வீட்டுக்கு சென்றுள்ளது.
பின், அவரை இழுத்து வந்து, ஸ்டேஷனில் வைத்து, மாலையில் நீதிமன்ற நேரம் முடிந்த பின், சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தில் போலீஸ் தவறு செய்கிறது என்பதை உச்சபட்ச அதிகாரியான டி.ஜி.பி.,யே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதிகாரத்தை மீறி தனிப்படைகள் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 2021 முதல், அதிகாரிகள் ஆலோசனையின்றி, போலீஸ் ஸ்டேஷன்களில் தனிப்படை இயங்கியதை, தற்போது கலைத்துள்ளனர்.
அப்படி என்றால், அதிகாரம் இல்லாமல், இதுவரை தனிப்படை போலீசார் நடத்திய அராஜகங்களுக்கு யார் பொறுப்பு? ஒட்டுமொத்தமாக போலீஸ் துறையானது, கட்டுப்பாட்டை மீறிய துறையாக உள்ளது. இத்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தகுதியற்றவர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.