காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை: அரசியல் கட்சிகள் கண்டனம்
காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை: அரசியல் கட்சிகள் கண்டனம்
ADDED : ஆக 07, 2025 12:41 AM
சென்னை:எஸ்.ஐ., படுகொலைக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: திருப்பூர் மாவட்டத்தில், குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை; கோவை காவல் நிலையத்தில், எஸ்.ஐ., அறையில் ஒருவர் துாக்கிட்ட நிலையில் உயிரிழப்பு என செய்திகள் வருகின்றன.
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் - ஒழுங்கிற்கு, என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்? விசாரிக்கச் செல்லும் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் துாக்கு போட்டுக் கொள்ளும் அளவுக்கு அலட்சியமாக இருந்ததையும் எப்படி எடுத்துக் கொள்வது?
முதல்வர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசி யலும், சீர்கெட்ட சட்டம் - ஒழுங்கை பற்றி யாரும் பேசக்கூடாது என்பதற்கான திசை திருப்பும் உத்தி மட்டுமே.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாருக்கே, இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவலநிலை உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் கட்டுக்கடங்காமல் பெருகி வரும் குடிப்பழக்கத்தாலும், போதைப்பொருள் புழக்கத்தாலும், மக்களுக்கு தான் பாதுகாப்பில்லை என்று பார்த்தால், மக்களை காக்கும் போலீசாரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.
எனவே, தங்கள் நிர்வாக குளறுபடிகளால் உயிரிழப்பவர்களுக்கு, இழப்பீட்டு தொகையை கொடுத்து, மக்களை மடைமாற்றி விடலாம் என்ற தி.மு.க.,வின் தப்புக்கணக்கு இனி செல்லுபடியாகாது.
பா.ம.க., தலைவர் அன்புமணி: பணியில் இருக்கும் காவல் அதிகாரியை படுகொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் வந்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் - -ஒழுங்கு என்பது பெயரளவுக்கு கூட இல்லை என்பதையும், யாரும் அச்சமின்றி வாழ முடியாது என்ற நிலை இருப்பதையும் இந்த கொலை காட்டுகிறது.
சட்டம் -- ஒழுங்கை பாதுகாத்து, மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த தவறியதற்காக, தமிழக மக்களிடம், முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அ.ம.மு.க., தலைவர் தினகரன்: தன் துறையை சார்ந்த எஸ்.எஸ்.ஐ.,யை பாதுகாக்க முடியாத முதல்வர் ஸ்டாலினால், பொது மக்களை எப்படி பாதுகாக்க முடியும்?
தி.மு.க., ஆட்சியில் சாமானிய மக்கள் துவங்கி, அரசு ஊழியர்கள், டாக்டர்கள், காவல் துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: பொது அமைதியை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு கூட, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காவல் துறையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முதல்வர், சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் இவ்வளவு அலட்சியமாக செயல்படுவது, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஆபத்தானது. சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை உடனடியாக தடுத்து நிறுத்த, முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.