ADDED : அக் 28, 2025 07:49 AM

சென்னை: சிறிய குற்றங்களில் ஈடுபட்டு, முதல் முறையாக வழக்கில் சிக்கிய இளம் சிறார்கள் மற்றும் 24 வயதிற்கு உட்பட்ட இளம் குற்றவாளிகள் 600 பேரை, நல்வழிப்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் சிறிய குற்றங்களில் ஈடுபட்டு, முதல் முறையாக வழக்கில் சிக்கிய இளம் சிறார்கள் மற்றும் இளம் குற்றவாளிகள் 600 பேர், சீர்திருத்த பள்ளிகள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
இப்பணியில், காவல் துறை, சிறைத்துறை, சமூக நலத்துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக்குழு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மனநல காப்பக அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் வாயிலாக, இளம் சிறார்கள் மற்றும் 24 வயதிற்கு உட்பட்ட இளம் குற்றவாளிகளுக்கு, சிறையிலேயே 'கவுன்சிலிங்' அளிக்கப்படுகிறது. அவர்கள் படிப்பை தொடரவும் வழிவகை செய்யப்படுகிறது.
இளம் குற்றவாளிகளுக்கு மனநல ஆலோசனை, மது மற்றும் கஞ்சா போதையில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் இருப்பிட சூழல் அறிந்து, குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இளம் சிறார்கள் மற்றும் இளம் குற்றவாளிகள், உரிய விசாரணைக்கு பின் நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் போது, அவர்கள் சுயதொழில் துவங் கவும், தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெறவும் உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

