கருணை அடிப்படையில் பணி போலீஸ் வாரிசுகள் காத்திருப்பு
கருணை அடிப்படையில் பணி போலீஸ் வாரிசுகள் காத்திருப்பு
ADDED : நவ 19, 2024 05:22 AM

சென்னை: பணியின் போது உயிரிழந்த போலீசாரின் வாரிசுகள் 707 பேர், கருணை அடிப்படையிலான பணிக்காக காத்திருக்கின்றனர்.
பணியின் போது உயிரிழந்த போலீசாரின் மகன், மகள் என வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், தகவல் பதிவு உதவியாளர், அலுவலக உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022ல், தகவல் பதிவு உதவியாளராக 1,480 பேர்; அலுவலக உதவியாளராக 56 பேர்; தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளராக தலா ஒருவர் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால், தகுதி இருந்தும் போலீசாரின் வாரிசுகள் 707 பேருக்கு, கருணை அடிப்படையில் இன்னும் பணி வழங்கப்படவில்லை. அவர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கருணை அடிப்படையிலான பணியை பெற, எங்களின் தந்தை, தாய் பணியின் போது இறந்த விபரங்கள், எங்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்களை, அரசிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் சமர்ப்பித்துள்ளோம்' என்றனர்.