விடுதி ஊழியர் கொன்று புதைப்பு இருவரிடம் போலீசார் விசாரணை
விடுதி ஊழியர் கொன்று புதைப்பு இருவரிடம் போலீசார் விசாரணை
UPDATED : அக் 15, 2026 01:29 AM
ADDED : அக் 15, 2026 01:26 AM
வேலுார்: வேலுார் தனியார் விடுதி ஊழியர் காணாமல் போன வழக்கில், பணம் கொடுக்கல், வாங்கல் முன்விரோதம் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது, போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
வேலுார் மாவட்டம், திருமணியை சேர்ந்தவர் தேவராஜ், 35. வேலுார் காகிதப்பட்டறையில் உள்ள தனியார் விடுதியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி திடீரென அவர் காணாமல் போனார்.
அவரது மனைவி புகாரில், வேலுார் வடக்கு போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தேவராஜ் கொலை செய்யப்பட்டு, கே.வி.குப்பம் அடுத்த மேல் விளாத்துார் பகுதியில் புதைக்கப்பட்டது தெரியவந்தது.
போலீசார், கொலை வழக்கு பதிந்து இருவரை பிடித்து விசாரிக்கின்றனர். போலீசாரிடம் கேட்டபோது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கே.வி.குப்பத்தை சேர்ந்த யாசின், தேஜஸ்வி மற்றும் தேவராஜ் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இதனால், அவரை காரில் அழைத்து சென்று கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது. இன்று ஆர்.டி.ஓ., முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. விசாரணை முடிவில் தான் முழு விவரங்கள் தெரியவரும் என்றனர்.
