போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில் எஸ்.பி., அரசு டாக்டர்கள் மீதான நடவடிக்கை ரத்து
போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில் எஸ்.பி., அரசு டாக்டர்கள் மீதான நடவடிக்கை ரத்து
ADDED : டிச 11, 2025 05:10 AM

மதுரை: போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி.,யாக இருந்த ராஜேஸ்வரி, அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
மதுரையில், ஒருவரது வீட்டில் நகை திருட்டு குறித்து, எஸ்.எஸ்.காலனி போலீசில் 2019ல் புகார் அளிக்கப்பட்டது. கோச்சடை ஜெயா என்பவரின், 17 வயது மகனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து துன்புறுத்தினர்.
ஒழுங்கு நடவடிக்கை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், 2019 ஜன., 24ல் இறந்தார். 2019 மார்ச் 26ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
செப்., 26ல் நீதிபதி ஜோசப் ஜாய் பிறப்பித்த உத்தரவு:
சம்பவத்தின்போது எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த இன்ஸ்பெ க்டர் அலெக்ஸ் ராஜா, சிறப்பு எஸ்.ஐ., ஆர்.ரவிச்சந்திரன், ஏட்டு எஸ்.ரவிச்சந்திரன், போலீஸ்காரர் சதீஷ்குமாருக்கு சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் பிரிவின் கீழ், தலா ஓராண்டு சிறை தண்டனை.
கொலையல்லாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ், தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்.
வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அருணாச்சலம், எஸ்.ஐ.,க்களாக இருந்த கண்ணன், பிரேம்சந்திரன் மற்றும் விசாரணையில் தெரியவரும் இதர நபர்களை கூடுதல் எதிரிகளாக சேர்த்து, உரிய நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கையை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.
விசாரணையை தொடர எஸ்.பி., அந்தஸ்திற்கு குறையாத புது அதிகாரியை டி.ஜி.பி., நியமிக்க வேண்டும்.
கண்ணன், பிரேம்சந்திரன் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். அருணாச்சலம் பணியில் உள்ளார். விசாரணை பாரபட்சமற்ற முறையில் தொடர, அது முடியும் வரை அவரை டி.ஜி.பி., சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இவ்வழக்கை முதலில் விசாரித்த, சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி.,யாக பணிபுரிந்த ராஜேஸ்வரி எதிரிகளுக்கு உதவும் வகையில் விசாரணையை சரியாக மேற்கொள்ளாமல், திட்டமிட்டு குறைபாடுகளுடன் செய்துள்ளதால், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி., மேற்கொள்ள வேண்டும்.
சிறுவனின் உடலில் இருந்த காயங்களை மறைத்து, வெளிக்காயங்கள் இல்லை என, தவறாக குறிப்பிட்டு விபத்து பதிவேடு வழங்கிய மதுரை அரசு மருத்துவமனையில் 2019ல் டாக்டராக பணிபுரிந்த ஜெயக்குமார்.
சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் சட்டவிரோதமாக எஸ்.ஐ.,யிடம் ஒப்படைத்த மருத்துவமனை நிலைய மருத்துவராக பணிபுரிந்த லதாவிற்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கையை மருத்துவ கல்வி இயக்குநர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
மேல் விசாரணை மேல் விசாரணை மற்றும் போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., தரப்பில், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி சுந்தர் மோகன் விசாரித்தார்.
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதம்:
தவறு செய்த போலீசாருக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியது ஏற்புடையது.
சம்பந்தப்பட்ட போலீசார் செய்த குற்றத்தை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, தண்டனை பெற்று தந்திருப்பது பாராட்டத்தக்கது. இது போன்ற தண்டனைகள் போலீஸ் காவலில் மரணம் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்க வழிவகுக்கும்.
ஆதாரத்தை மறைத்து, எதிரிகளுக்கு ஆதரவாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டனர் என, விசாரணையின் போது சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் வாயிலாக தெரியவரும் பட்சத்தில், அவர்களை அப்போதே வழக்கில் சேர்த்து விசாரித்திருக்க வேண்டும்.
மாறாக தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, மீண்டும் அதே வழக்கில் மேல் விசாரணை செய்ய உத்தரவிட முடியாது.
மேல் விசாரணை மற்றும் போலீஸ் அதிகாரிகள், டாக்டர் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வாதாடினார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சி.பி.சி.ஐ.டி., விசாரணையை தொடர புது அதிகாரியை நியமிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் அருணாச்சலத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி.,யாக இருந்த ராஜேஸ்வரி, டாக்டர் ஜெயக்குமார், நிலைய மருத்துவர் லதாவிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு உத்தரவிட்டார்.

