UPDATED : ஜன 30, 2025 11:24 PM
ADDED : ஜன 30, 2025 11:23 PM

சென்னை : தமிழக காவல் துறையின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவுகளை போலீஸ் நிறைவேற்றுவது இல்லை என, ஐகோர்ட் பலமுறை அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது, 'கோர்ட் உத்தரவையே அலட்சியம் செய்யும் போலீசாரை வைத்துக் கொண்டு எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும்?' என்று கடுமையான கேள்வியும் எழுப்பியது.
அந்த பின்னணியில், நேற்று ஒரு வழக்கில் நீதிபதி வேல்முருகன், காவல் துறை மீதான வேதனையை வெளிப்படுத்தினார். காவல் துறைக்கு பொறுப்பான உள்துறை செயலருக்கு, காவல் துறையின் அலட்சியமான செயல்பாடுகள் குறித்து தெரியுமா என்பதே தனக்கு தெரியவில்லை என்றார் அவர்.
சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் சுந்தர் என்பவர், தன் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்ததாக, 2015ல் புகார் கொடுத்தார்.
உடனே முதல் தகவல் அறிக்கை எழுதி, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், 10 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், அதற்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் சுந்தர் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கின் நிலை என்ன என்று அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
முடித்து வைப்பு
'வழக்கு, 2015ல் பதிவு செய்யப்பட்டது; அதே ஆண்டில் முடித்து வைக்கப்பட்டது; குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யவில்லை' என, காவல் துறை தெரிவித்தது.
இதை ஏற்க மறுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பதிவு செய்யும் வழக்குகளில், புலன் விசாரணை முடிந்த பிறகும், காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது, இது முதல் முறை அல்ல. தமிழகம் முழுதும் பல வழக்குகளில் இவ்வாறு நடந்துள்ளது; இன்னும் நடக்கிறது.
ஒரு புகாரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும், உடனே அதை நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். புலன் விசாரணை துவங்கியதும் சாட்சி ஆவணங்கள், வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களை உடனுக்குடன் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.
குறித்த காலத்துக்குள் புலன் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இது தான் சட்ட நடைமுறை. ஆனால், உண்மையில் அப்படி நடக்கவில்லை.
வழக்கு போட வசதி உள்ளவர்கள், வக்கீலை அமர்த்தி மனு தாக்கல் செய்து, போலீஸ் விசாரணைக்கு வேகமாக உத்தரவுகளை பெறுகின்றனர்.
பணம் இல்லாதவர்கள் என்ன செய்வர்? அவர்கள் நீதி கேட்டு போராட வேண்டிய நிலை உள்ளது. சில வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அந்த உத்தரவை போலீசார் பின்பற்றுவது இல்லை.
ஏதோ ஒரு வகையில், போலீசார் பொதுமக்களுக்காக அல்லாமல், தன்னிச்சையாக செயல்படுகின்றனர். பாதிக்கப்படும் அத்தனை பேரும் நீதிமன்றத்தை நாடி, உத்தரவை பெற இயலாது.
புகார் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யவும், புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இவற்றை பார்க்கும் போது, போலீஸ் அதிகாரிகள் சட்டத்தை பின்பற்றுவது இல்லை என்பது தெளிவாகிறது. இந்த வழக்கு, அதற்கு ஒரு உதாரணம். கடந்த 2015ல் பதிவான வழக்கு, அதே ஆண்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதம்
ஆனால், அது குறித்த விபரங்களை ஒன்பது ஆண்டுகள் வரை மனுதாரருக்கு, போலீசார் தெரிவிக்கவில்லை; சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இதுபோல நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும், அவற்றால் அப்பாவி பொதுமக்கள், ஏழைகள் பாதிக்கப்படுவது குறித்தும், தமிழக உள்துறை செயலருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. எனவே, தமிழக உள்துறை செயலர், இந்த கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.