பாலியல் வழக்கில் போலீஸ் அலட்சியம்: முதல்வரிடம் விளக்கம் கேட்குது பா.ஜ.,
பாலியல் வழக்கில் போலீஸ் அலட்சியம்: முதல்வரிடம் விளக்கம் கேட்குது பா.ஜ.,
ADDED : டிச 09, 2024 04:34 AM

சென்னை : ''மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு பதியாமல், போலீசார் குற்றவாளிகளை எச்சரித்து அனுப்பியது தொடர்பாக தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னையில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவியை, ஏழு பேர் பாதிக்கப்பட்ட கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருந்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு அனுப்பி வைத்திருக்கின்றனர் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சித்து, தொடர்ந்து வற்புறுத்திய பின்பே, தற்போது மீண்டும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரண்டு குற்றவாளிகளை கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு அனுப்பும் அதிகாரம் காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாக கடந்து சென்றிருக்கின்றனர்?
பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விபரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்? தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை, அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
உடனடியாக முதல்வர் ஸ்டாலின், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.