பணியின் போது மொபைல்போனில் மூழ்கும் போலீசார்: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
பணியின் போது மொபைல்போனில் மூழ்கும் போலீசார்: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை
UPDATED : டிச 21, 2024 10:53 PM
ADDED : டிச 21, 2024 06:55 PM

சென்னை: திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும், பணியில் இருக்கும் போலீசார் மொபைல்போனில் மூழகி கிடக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று கொலை வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டி என்பவர் நெல்லை நீதிமன்றம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் ராமகிருஷ்ணன் என்பவரை, சிறப்பு எஸ்.ஐ. உய்க்காட்டான் துரத்தி சென்றார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணனை பிடித்து கொடுத்தனர். கொலைக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, ' பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?' என சரமாரியாக கேள்வி எழுப்பி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடந்து வருகிறது என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், கொலை நடந்த போது பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் என்ன செய்தனர். பணியில் இருக்கும் போலீசார் மொபைல்போனில் மூழ்கி கிடக்கின்றனர் எனக்கூறியதுடன், கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்.ஐ.,க்கு பாராட்டு தெரிவித்ததுடன், சன்மானம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.