பள்ளி மாணவர்கள் இடையே ஜாதி மோதல் விபரம் தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவு
பள்ளி மாணவர்கள் இடையே ஜாதி மோதல் விபரம் தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவு
ADDED : பிப் 01, 2024 02:32 AM
பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட புகார் வழக்கு விபரங்களை ஒரு நபர் கமிஷனுக்கு தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவரை ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்கியது.
இதையடுத்து பள்ளிகளில் ஜாதி ரீதியான செயல்பாடுகளை தடுக்க உரிய வழிமுறை ஏற்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் கேட்டுள்ள விபரங்களை தாக்கல் செய்யும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி இயக்குனரகம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் பள்ளிகளில் ஜாதி ரீதியான புகார் வழக்குகள் விபரங்களை தாக்கல் செய்யும்படி சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் மாவட்ட எஸ்.பி. அருண் கபிலனுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளார்.
இது சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கடந்த ஜன. 22ல் அனுப்பப்பட்டு அதன் விபரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -