போலீஸ் பக்ருதீன் வழக்குகள் விரைந்து விசாரிக்க உத்தரவு
போலீஸ் பக்ருதீன் வழக்குகள் விரைந்து விசாரிக்க உத்தரவு
ADDED : ஜன 30, 2025 02:54 AM
சென்னை:'சிறையில் பல ஆண்டுகளாக விசாரணை கைதியாக உள்ள, போலீஸ் பக்ருதீன் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்' என, காவல் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட வழக்குகள் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், 45, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர், தன்னை தனிமை சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, 'பி.ஏ., அரசியல் அறிவியல் பட்டம் பயின்று வருவதால், பக்ருதீனுக்கு செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன,'' என, தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 'அரசியலமைப்பு மற்றும் சிறை விதிகள்படி, விசாரணை கைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, பக்ருதீனுக்கு சிறை விதிகள்படி அவருக்கான உரிமைகள், அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும். அவர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தாயை பார்க்க விடுப்பு கோரியது தொடர்பாக, தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, பக்ருதீன் மனுவை முடித்து வைத்தனர்.

