நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு போலீஸ் ஏட்டுகள் துாக்கியடிப்பு
நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு போலீஸ் ஏட்டுகள் துாக்கியடிப்பு
ADDED : மே 19, 2025 04:32 AM

திருப்பூர் : திருப்பூர் வந்த பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸ் ஏட்டுகள் இருவர், ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
திருப்பூரில், பா.ஜ., சார்பில் கடந்த 16ம் தேதி நடந்த மூவர்ணக் கொடி பேரணியில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வேலம்பாளையம் சாலையில் உள்ள ஹோட்டலில் ஓய்வெடுத்தார்.
அங்கு, அவரை கட்சி நிர்வாகிகள் பலரும் சந்தித்தனர். அப்போது, போலீஸ் சீருடை அணிந்த இருவர், அங்கு வந்து நயினாரை சந்தித்தனர்.
இத்தகவல், உளவுப்பிரிவு போலீசாரால் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு சென்றது.
இதையடுத்து, அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் ஏட்டு மந்திரம், 43; திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் ஏட்டு சின்னசாமி, 40, ஆகியோர், பணி நேரத்தில் சீருடையில், தனிப்பட்ட முறையில் அரசியல் பிரமுகரைச் சென்று சந்தித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்கள் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இருவர் மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட போலீசார் இருவரும் சகோதரர்கள்; நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.