ADDED : ஏப் 15, 2025 05:39 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே தேரிப்பனையை சேர்ந்தவர் வசந்தா, 70. வீட்டில் தனியாக வசித்தார். இவரது மகன் விக்ராந்த், சாத்தான்குளம் டி.எஸ்.பி., அலுவலக தலைமை காவலர். வசந்தாவின் மகள் மற்றும் உறவினர்கள் நேற்று பலமுறை மொபைல் போனில் தொடர்பு கொண்டும், அவர் போனை எடுக்கவில்லை.
அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வசந்தா இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த, 7 சவரன் தங்க சங்கிலி, 1 சவரன் கம்மல் மாயமாகி இருந்தது. மெஞ்ஞானபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், தனியாக இருந்த வசந்தாவை, தலையணையால் அமுக்கி கொலை செய்து, நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதை நன்கு அறிந்த நபர்கள் செய்திருக்கலாம் என்ற கோணத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.