மாணவியரின் பிரச்னைகளுக்கு தீர்வு தயார் நிலையில் 'போலீஸ் அக்கா'க்கள்
மாணவியரின் பிரச்னைகளுக்கு தீர்வு தயார் நிலையில் 'போலீஸ் அக்கா'க்கள்
ADDED : மே 09, 2025 09:28 PM
சென்னை:பள்ளி, கல்லுாரி மாணவியரின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்கவும், அவர்களுக்கு பாலியல் தொல்லை தருவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கவும், 'போலீஸ் அக்காக்கள்' உரிய பயிற்சியுடன் தயார் நிலையில் உள்ளனர்.
பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கவும், அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்கவும், கோவை போலீஸ் கமிஷனராக இருந்த பாலகிருஷ்ணன், 'போலீஸ் அக்கா' என்ற திட்டத்தை 2022ல் அறிமுகம் செய்தார்.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
போலீஸ் அக்கா திட்டம் குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் முன்மொழிவு பெறப்பட்டு, எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு, பள்ளி, கல்லுாரி மாணவியர் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி; அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர, 'கவுன்சிலிங்' தருவது எப்படி; சைபர் குற்றங்கள், பாலியல் தொல்லைகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது எப்படி என, வாழ்வியல் முறைகள் மற்றும் உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
ஒரு பெண் போலீசுக்கு தலா இரண்டு பள்ளிகள், கல்லுாரிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவியருடன் உரையாடுவர்.
அவர்களின் சொல்ல முடியாத பிரச்னைகளை காது கொடுத்து கேட்பர். மாணவியருடன், 'வாட்ஸாப்'பில் தொடர்பில் இருப்பர். மாணவியர் தெரிவித்த பாலியல் ரீதியான பிரச்னைகள் குறித்து ரகசியம் காப்பர்.
போலீஸ் அக்காக்கள் பேசியதன் வாயிலாக, பள்ளி மாணவியருக்கு நடந்த பாலியல் தொல்லைகள் தொடர்பாக, 540 'போக்சோ' வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீஸ் அக்காக்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, மாணவியருடன் உரையாடுவர். பள்ளி, கல்லுாரிகள் திறந்தவுடன், தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு எல்லா மாணவியரையும் சந்தித்து பேச உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.