திருநங்கையர் திடீர் பேரணி தடுத்து நிறுத்தி போலீசார் சமாதானம்
திருநங்கையர் திடீர் பேரணி தடுத்து நிறுத்தி போலீசார் சமாதானம்
ADDED : ஜூன் 19, 2026 02:06 AM

சென்னை: திருநங்கையர் வாழ்வாதாரம் தொடர்பாக, முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற திருங்கையரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம் சார்பில், திருநங்கையர் வாழ்வாதாரம் தொடர்பாக, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் விஜயிடம் மனு கொடுக்க, 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நேற்று சென்னை காமராஜர் சாலை வழியே, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
அவர்களை தீவுத்திடல் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரம்அடைந்த திருநங்கையர், போர் நினைவுச் சின்னம் அருகே, சாலையில் அமர்ந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, தீவுத்திடல் உள்ளே அழைத்து சென்றனர்.
அதன்பின், நான்கு பேரை மட்டும், தலைமைச் செயலகம் செல்ல அனுமதித்தனர்.
பேரணி குறித்து, திரு நங்கை இன்பா கூறுகையில், ''திருநங்கையர் வாழ்வா தாரம் தொடர்பாக, முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க, தலைமைச் செயலகம் வந்தோம். ஆனால், போலீசார் எந்த காரணமும் சொல்லாமல், எங்களை தடுத்து நிறுத்தினர்.
''மனு கொடுப்பது, எங்கள் அடிப்படை உரிமை. மனு கொடுக்க வந்தவர்களை தடுப்பது அநீதி. தமிழக வெற்றிக் கழக அரசு சமூக நீதி அரசாக, எங்களுக்கு தெரியவில்லை,'' என்றார்.
