தலைதுாக்கும் வன்முறை சம்பவங்கள்: கட்டுப்படுத்த காவல் மாணவர் படை
தலைதுாக்கும் வன்முறை சம்பவங்கள்: கட்டுப்படுத்த காவல் மாணவர் படை
ADDED : ஏப் 19, 2025 01:09 AM

சென்னை: கடந்த 2023ல், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், பிளஸ் 2 மாணவர் சின்னதுரை என்பவர், அவரது வீடு புகுந்து வெட்டப்பட்டார். அவர் மீது, தற்போது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. அதேபோல, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பஸ்சை மறித்து, அதில் பயணம் செய்த மாணவர் ஒருவர் வெட்டப்பட்டார். இரு தினங்களுக்கு முன், திருநெல்வேலியில், 8ம் வகுப்பு மாணவனை, மற்றொரு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.
மாநிலத்தின் பல பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன்முறை பாதையில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மாணவர்களை நல்வழிப்படுத்தவும், மாணவர்களிடம் நற்சிந்தனைகளை வளர்க்கவும், 2019ல், தமிழக காவல் துறை சார்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. அதன்பின், வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
தற்போது மாநிலம் முழுதும் காவல் மாணவர் படையை உருவாக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
காவல் துறை, வருவாய் துறை, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் இணைந்து, காவல் மாணவர் படையை உருவாக்கி உள்ளனர். இப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாநிலம் முழுதும் காவல் மாணவர் படை விரிவுப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். வன்முறை பாதையில் சென்றால், எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்தும் கவுன்சிலிங் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

