'ஆன்லைன் ரம்மி' விளையாடும் போலீசாருக்கு எச்சரிக்கை
'ஆன்லைன் ரம்மி' விளையாடும் போலீசாருக்கு எச்சரிக்கை
ADDED : ஜன 25, 2025 02:20 AM
சென்னை:'பணியின் போது ரம்மி விளையாட்டில் மூழ்கி கிடக்கும் போலீசார் மீது, அவர்களின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மண்டல ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது, போலீசார் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மீறி, போலீசார் செயல்படுகின்றனர். இதை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கண்டித்துள்ளனர். சமீபத்தில் வழக்கு விசாரணையின் போது, 'பணியின் போது போலீசார் மொபைல் போனில் மூழ்கி கிடந்தால், குற்றங்களை எப்படி குறைக்க முடியும்' என்றும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், தற்போது போலீசாரிடம், 'ஆன்லைன்' ரம்மி விளையாடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், இளம் வயது ஆயுதப்படை போலீசார், பணியின் போது மொபைல் போனில் ரம்மி விளையாட்டில் மூழ்கி கிடப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
'ஆன்லைன்' ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணம் இழந்தவர்கள் பலர் தற்கொலை செய்துள்ளனர். இந்த விளையாட்டு, தற்போது போலீசாரிடம் அதிகளவில் பரவி வருவது கவலை அளிக்கிறது. இதனால், போலீசார் கடன் பிரச்னைகளில் சிக்கி, நிம்மதியின்றி தவிக்கின்றனர். ரம்மி விளையாடும் போலீசார் மீது, அவர்களின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்படும் வகையில், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

