மெத்ஆம்பெட்டமைனை திருடி விற்றோம் கைதான போலீஸ்காரர் வாக்குமூலம்
மெத்ஆம்பெட்டமைனை திருடி விற்றோம் கைதான போலீஸ்காரர் வாக்குமூலம்
ADDED : டிச 20, 2024 12:36 AM
சென்னை:கடத்தல் கும்பலிடம் பறிமுதல் செய்த மெத்ஆம்பெட்டமைன் போதைப்பொருளை திருடி, லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக போலீஸ்காரர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னையில், செயலி வாயிலாக மெத்ஆம்பெட்டமைன் விற்ற போலீஸ்காரர்கள் பரணி, அருண்பாண்டியன், ஜேம்ஸ், ஆனந்த், சபீர் ஆகியோர் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், அருண்பாண்டியன், 700 கிராம் மெத்ஆம்பெட்டமைனை, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்; நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஆனந்த், சபீர் ஆகியோர், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிகின்றனர். பரணி, அயனாவரம் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.
'சிந்தட்டிக் டிரக்ஸ்' எனப்படும், மெத்ஆம்பெட்டமைன், கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்க, செயலி வாயிலாக போலீசார் ஒன்றிணைந்துள்ளனர். கைதான ஐந்து போலீசாரும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.
ஆண்களிடம் நெருக்கமாக இருக்கும் போது, அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக, மெத்ஆம்பெட்டமைன் பயன்படுத்தியதாக விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், மேலும், இரண்டு போலீசாருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.
அசோக்நகர் குற்றப்பிரிவு போலீஸ்காரரான ஜேம்ஸ் அளித்துள்ள வாக்குமூலம்:
ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் நடக்கிறது.
கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்த மெத்ஆம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை, காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே திருடி விடுவோம். அதன்பின், செயலி வாயிலாக விற்று விடுவோம்.
பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையங்களில் வைக்கப்படும் கஞ்சா, மெத்ஆம்பெட்டமைன் எடை குறைவதற்கும் நாங்கள் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.