மது போதையில் மரம் ஏறிய போலீஸ் விழுந்து உயிரிழப்பு
மது போதையில் மரம் ஏறிய போலீஸ் விழுந்து உயிரிழப்பு
ADDED : டிச 22, 2024 08:59 AM

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வகுமரன், 30; சென்னை செம்பியம் காவல் நிலைய முதல்நிலை காவலர்.
இவரது அண்ணன் பெருமாள்ராஜ், 38, கே.கே., நகர் 2வது செக்டாரில் உள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் வசிக்கிறார். இவர், கே.கே., நகர் மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிகிறார்.
அண்ணன் வீட்டில் ஓராண்டாக தங்கியிருந்த செல்வகுமரன், கடந்த 19 முதல் 30ம் தேதி வரை, மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு சென்றார். அப்போது, தனக்கு திருமணம் செய்து வைக்காதது குறித்து, அண்ணனிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தார்.
அப்போது, வீட்டில் இருந்த பொருட்களை உடைத்ததுடன், அண்ணன் பெருமாள்ராஜை அறையில் வைத்து பூட்டினார்.
இதையடுத்து, பெருமாள்ராஜ், மொபைல் போன் வாயிலாக கே.கே., நகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து, செல்வகுமரனிடம் சமாதானம் பேசி, பெருமாள்ராஜை அறையில் இருந்து மீட்டனர்.
பின் செல்வகுமரன், மற்றொரு அறை வழியாக, பின்புற கதவை திறந்து வெளியே சென்றார். போதையில் அங்கிருந்த மரம் மீது ஏறியபோது, அதிலிருந்து தவறி விழுந்ததில், கீழே இருந்த தடுப்பு சுவரின் கம்பி, அவரது ஆசனவாயில் குத்தி ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு, கே.கே., நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் பரிசோதனையில், செல்வகுமரன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. கே.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.