புகார் அளிக்க வந்த பெண் மீது தாக்குதல்: போலீஸ்காரர் சஸ்பெண்ட்
புகார் அளிக்க வந்த பெண் மீது தாக்குதல்: போலீஸ்காரர் சஸ்பெண்ட்
UPDATED : ஜூன் 24, 2025 07:57 PM
ADDED : ஜூன் 24, 2025 05:21 PM

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாள் சத்திரம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்க வந்த பெண்கள் மீது ராமர் என்ற போலீஸ்காரர் தாக்குதல் நடத்தினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராமரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டு உள்ளார்.
பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் போலீஸ் ஸ்டேசனில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை போலீஸ் கொடூரமாக தாக்கியதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை சரமாரியாகத் தாக்கும் அளவிற்கு போலீஸ் அதிகாரிக்கு துணிச்சல் எங்கு இருந்து வந்தது? அதிலும் ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணை தாக்கும் அளவிற்கா போலீசாரிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது?
குற்றவாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்டோரை காக்க வேண்டிய போலீசாரே பாதிக்கப்பட்டோரை தாக்கினால், திராவிட மாடல் ஆட்சியில் எங்கு சென்று நீதி கேட்பது என்று புரியவில்லை.
போலீஸ்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு தீர விசாரணை செய்து, அதிகார மமதையில் அராஜகத்தின் ஊற்றிடமாக செயல்பட்டு மூன்று பெண்களை தாக்கிய போலீஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
அன்புமணி கண்டனம்
பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், குற்றங்களைச் செய்து விட்டு கையூட்டு கொடுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் போலீஸ் ஸ்டேசன்களில் மரியாதைக் கிடைக்கிறது. பாதிக்கப்பட்டு நீதி கேட்டு செல்லும் பெண்களுக்கு அடி உதை தான் கிடைக்கிறது. திமுக ஆட்சியின் காவல் அறம் இது தானா?
'தமிழகக் போலீசின் ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது' என்று 1996 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி சட்டசபையிலேயே குற்றஞ்சாட்டினார். ஆனால், இன்று அவரது புதல்வர் ஆட்சியில் போலீசாரின் ஈரல் முழுமையாகவே அழுகி விட்டது என்பதைத் தான் கன்னம்மாசத்திரம் காவல்நிலையத் தாக்குதல் காட்டுகிறது.
பாலியல் தொல்லையாலும், அதன் பின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் ராமர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.