சிறு சிறு துறை தண்டனைகளால் தவிக்கும் போலீசார் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
சிறு சிறு துறை தண்டனைகளால் தவிக்கும் போலீசார் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
ADDED : ஜூலை 05, 2025 06:48 PM
தமிழக போலீஸ் துறையில் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான போலீசாரின் சிறு தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என போலீசார் 4 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இத்துறையில் சிறு தவறு செய்தாலும் 'மெமோ, சஸ்பெண்ட்' போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போலீஸ் விதிகளுக்கு முரணாக நடக்கும்பட்சத்தில் நிரந்தர பணி நீக்கமும் செய்யப்படுகின்றனர்.
துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளான போலீசாரில் சிலர், தங்கள் தரப்பில் நியாயம் இருக்கும்பட்சத்தில், நீதிமன்றம் வரை சென்று போராடி தடை உத்தரவு பெற்று பணியாற்றி வருகின்றனர்.
நீதிமன்றம் சென்றால் துறை ரீதியாக தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படும் எனக்கருதி பெரும்பாலான போலீசார், அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை. இதனால் மனஅழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2021ல் சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், போலீசாரின் துறை ரீதியான சிறு தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்பதும் ஒன்று. இதனால் உற்சாகமடைந்த போலீசாருக்கு, நான்கு ஆண்டுகளாக இதுகுறித்து எந்த உத்தரவும் தி.மு.க., அரசு பிறப்பிக்கவில்லை.
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் இப்போதாவது தங்கள் மீதான சிறு தண்டனைகள் ரத்து செய்யப்படுமா என போலீசார் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
துறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் எங்களுக்கு 3ஏ, 3பி, என இருவித நோட்டீஸ் கொடுக்கப்படும்.
இதில் 3ஏ என்பது சிறு தண்டனை. அதாவது பணியில் கவனமின்மை, முன்னறிவிப்பின்றி விடுமுறை, தாமத வருகை போன்றவைக்கு தருவது. சலுகைகள், படிகள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும். 3பி என்பது லஞ்சப்புகார், நீதிமன்ற விசாரணை நிலுவை போன்ற காரணங்களை உள்ளடக்கியது.
இதில் சிறு தண்டனைகளை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் இருந்தும் பெரும்பாலும் ரத்து செய்வதில்லை. இதனால் எங்களது சர்வீசில் இது கரும்புள்ளியாக கருதப்படும். சலுகைகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.
தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி எங்களது சிறு தண்டனைகளை ரத்து செய்தால் மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் விடிவு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- - - நமது நிருபர் -