57.84 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து
57.84 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து
UPDATED : மார் 03, 2024 03:52 AM
ADDED : மார் 03, 2024 03:40 AM

சென்னை : தமிழகத்தில், 57.84 லட்சம் குழந்தைகளுக்கு, இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
இந்தியாவில் போலியோ என்ற இளம்பிள்ளை வாதத்தை ஒழிப்பதற்காக, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் சேர்ந்துள்ளதால், தற்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை, 5 வயதுக்கு உட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகள், அங்காடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனை சாவடிகள் மற்றும் நடமாடும் குழுக்கள் வாயிலாக, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.
சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட உள்ளது.

