UPDATED : ஜன 05, 2025 12:54 PM
ADDED : ஜன 05, 2025 12:30 PM

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பேச்சால் தி.மு.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள புகைச்சல், விஸ்வரூபம் எடுக்குமா, எதில் சென்று முடியும் என்பதே இன்றைய அரசியலில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதற்கான விடை, சட்டசபை கூட்டத்தில் தெரியும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழகத்தில் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவது பற்றியும், போராட்டம் நடத்தினால் வழக்கு பதியப்படுவது பற்றியும் தங்கள் கட்சி மாநாட்டில் குறை கூறி பேசினார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதா என்றும் முதல்வருக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு முரசொலியில் காட்டமான பதில் தரப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணனின் கருத்து, கூட்டணி அறமும் அல்ல அரசியல் அறமும் அல்ல; தோழமைக்கான இலக்கணமும் அல்ல; இப்படி பேசுவதால் தோழமை சிதையும் என்று முரசொலியின் முதல் பக்கத்தில் கட்டுரை வெளியாகி உள்ளது.
ஆளுங்கட்சி எதிர்பார்க்கும் அரசியல் அறம் என்பது, அனைவரும் அறிந்ததே. எந்த ஒரு அசம்பாவிதம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டாலும், மாநில அரசுக்கு ஆதரவாகவே அறிக்கை வெளியிட வேண்டும், அவ்வப்போது அரசை பாராட்டியும் புகழ்ந்தும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.
தப்பி தவறி கூட போராட்டம் நடத்தக்கூடாது; மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தாராளமாக நடத்திக் கொள்ளலாம். இதுதான் தமிழகத்தில் தி.மு.க., எதிர்பார்க்கும் கூட்டணி அறம். இதை பெரும்பாலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் கடைப்பிடித்தே வருகின்றனர்.
இப்படி ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே தொடர்ந்து குரல் கொடுப்பதால், தங்கள் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதை, கூட்டணிக் கட்சிகள் உணராமல் இல்லை.
அந்த அதிருப்தியை சரிக்கட்டவும், தங்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், அவ்வப்போது அரசுக்கு எதிராக சில கருத்துக்களை சொல்வது கூட்டணிக் கட்சியினருக்கு வாடிக்கை.
காங்கிரஸ் கூட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பேசும் அதன் தலைவர்கள், மாநில அரசுக்கு எதிராக வீராவேசமாக பேசுவதும், பின்னர் கேட்டால், 'அதெல்லாம் தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசியது' என்று பம்மி பதுங்குவதும் வாடிக்கையாக நடக்கிறது.விடுதலை சிறுத்தைகள் இப்படி அரசுக்கு எதிராக குறை கூறுவதும், பின்னர் பதுங்குவதுமாக உள்ளனர்.
இந்த வரிசையில் இப்போது புதிதாக மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளது.மாநில அரசுக்கு எதிராக வீராவேசமாக பேசிய மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க.,வின் அதிருப்தியை உணர்ந்து என்ன பதில் சொல்லப் போகிறார் என்று அந்தக் கட்சியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அரசியலில் முன்பு, தி.மு.க.,- அ.தி.மு.க., என இரண்டு கூட்டணிகள் மட்டுமே இருந்தன. அ.தி.மு.க.வும் பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தது. அதனால் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கொள்கை பேசக்கூடிய கட்சிகளுக்கு தி.மு.க., தவிர வேறு வாய்ப்பு இல்லாத சூழல் இருந்தது.இப்போது பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்ட அ.தி.மு.க., தங்கள் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வருமா என்று வலை வீசிக் கொண்டிருக்கிறது.
அதேபோல் நடிகர் விஜய்யும் புதிதாக கட்சி ஆரம்பித்து, கூட்டணிக்கு கட்சிகள் வரலாம் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கிறார்.இப்படி தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து, அழைப்பும் வெளிப்படையாக வந்திருக்கும் சூழலில், ஆளும் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி தர தொடங்கியுள்ளன.
இந்த நெருக்கடி, தி.மு.க., தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது என்பதற்கு சாட்சியாகவே இன்றைய முரசொலி கட்டுரை அமைந்துள்ளது. ஆளுங்கட்சியின் அதிருப்தியும், கூட்டணிக் கட்சிகள் அளிக்கும் நெருக்கடியும், நாளுக்கு நாள் அரசியல் அரங்கில் சூடு கிளப்பி வருகின்றன. இந்த ஆடு புலி ஆட்டம் எதில் சென்று முடியும் என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

