டிஜிபி அலுவலகம் முன் வி.சி தாக்குதல்: கத்தியை வீசி விரட்டிய அரசியல் தலைவர்
டிஜிபி அலுவலகம் முன் வி.சி தாக்குதல்: கத்தியை வீசி விரட்டிய அரசியல் தலைவர்
ADDED : செப் 07, 2025 07:13 AM

சென்னை:சென்னையில், டி.ஜி.பி., அலுவலகம் அருகே, புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் மூர்த்தி என்பவரும், வி.சி., கட்சியினரும் மோதிக் கொண்டது குறித்து, குறித்து மெரினா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகம் அருகே, புரட்சி தமிழகம் என்ற கட்சியின் தலைவர் மூர்த்தி என்பவர், நேற்று நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே சென்ற வி.சி., கட்சியைச் சேர்ந்த சிலர், திடீரென அவர் மீது காலணிகளை வீசினர்.
அதை தடுக்க மூர்த்தி முற்பட்டார். இதை பார்த்த டி.ஜி.பி., அலுவலக பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் தடுக்க முயன்றார்.
ஆனாலும், இருதரப்பினரை தடுக்க முடியவில்லை. அப்போது, வி.சி., கட்சியினர் கோஷமிட்டபடியே மூர்த்தியை தொடர்ந்து தாக்கினர்.
இதையடுத்து மூர்த்தி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வி.சி., கட்சியினர் மீது வீச துவங்கினார். அவர்கள் தப்பி ஓடினர்.
இந்த மோதலில் வி.சி., கட்சியைச் சேர்ந்த மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து இரு தரப்பினரின் புகாரையடுத்து, மெரினா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் மூர்த்தி, அவரது 'யு டியூப்' சேனலில், வி.சி., தலைவர் திருமாவளவன் குறித்து அடிக்கடி அவதுாறு கருத்துகளை பதிவிட்டு வந்ததாகவும், அதற்காக மூர்த்தி மீது வி.சி., கட்சியைச் சேர்ந்தோர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
வேடிக்கை பார்க்கிறதா அரசு? டி.ஜி.பி., அலுவலக வாயிலில், ஒரு அரசியல் கட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்துவதை காவல் துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு. தி.மு.க.,வின் கூட்டணி கட்சி என்றால், அவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட காவல் துறை அனுமதிக்குமா? - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,
ஏட்டளவில் சட்டம் - ஒழுங்கு ஒரு கட்சி தலைவர் மீது, வி.சி.,யினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது. நேற்று, ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று, காவல் துறை அலுவலகம் அருகில், மற்றொரு கட்சி தலைவரை தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு ஏட் டளவில் கூட இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
எதை விரும்புகிறது அரசு? இச்சம்பவம் மூலம், கலவரம் நடப்பதையும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதையும் காவல் துறை விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும். - சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நா.த.க.,
கைது செய்ய வேண்டும் பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மூர்த்தியை தாக்கியோரை உடனே கைது செய்ய வேண்டும்; அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். - அன்புமணி , தலைவர், பா.ம.க.,