பணப்பட்டுவாடாவை எளிதாக்க வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகள்
பணப்பட்டுவாடாவை எளிதாக்க வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகள்
ADDED : நவ 19, 2025 06:30 AM

சென்னை: எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு பணியின்போது, வாக்காளர்களின் விபரங்களை, அரசியல் கட்சிகள் சேகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் இறந்துள்ளனர்; முகவரி மாறியுள்ளனர். பலர் இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலை, சரி செய்யும் நடவடிக்கையை, இந்திய தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. இதற்காக எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து வருகிறது.
இப்பணியில், முதற்கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணியில், 68,467 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் 2.37 லட்சம் அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகள் இணைந்து, பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இதுவரை 6.04 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. அவற்றில், 61.6 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, தேர்தல் கமிஷன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு அரசியல் கட்சி ஏஜன்டுகளும், தினமும் 50 நிரப்பப்பட்ட படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.
இவ்வாறு, வாக்காளர்களிடம் படிவங்களை பெறும், ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள், அதில் உள்ள ஆதார் எண், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விபரங்களை, ரகசியமாக சேகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவிற்காக, இந்த நடவடிக்கையில் பிரதான அரசியல் கட்சிகள் ஈடுபடுவதாக, வாக்காளர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது.

