மயிலாடுதுறை வாலிபர்கள் கொலைக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம்!: கள்ளச்சாராயத்தை அரசு மூடி மறைக்கிறது என கொதிப்பு
மயிலாடுதுறை வாலிபர்கள் கொலைக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம்!: கள்ளச்சாராயத்தை அரசு மூடி மறைக்கிறது என கொதிப்பு
UPDATED : பிப் 16, 2025 07:21 AM
ADDED : பிப் 16, 2025 12:17 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட தகராறில், இரு வாலிபர்களை கத்தியால் குத்தி கொலை செய்த சாராய வியாபாரி உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக போலீசார் கூறியதால், 'வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே, காவல் துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், மேலும் சில அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை அரசு மூடி மறைக்க முயற்சிப்பதாக, கொலையானவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் கொதிப்படைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் போலீஸ் சரகம், முட்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34. இவரும், இவரது குடும்பத்தினரும் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் குறைந்த விலை மது பாட்டில்களை சட்ட விரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்துள்ளனர்.
குற்றச்சாட்டு
இதை தட்டிக் கேட்போர் மீது தாக்குதல் நடத்துவது இவர்களின் வழக்கம். இதுகுறித்து புகார் கொடுத்தாலும், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்த வழக்கில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரால் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனாலும், அவரது குடும்பத்தினர் வெளிமாநில சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 13ம் தேதி முட்டம் குடியிருப்பு பகுதி அருகே சாராயம் விற்பனை குறித்து தட்டிக்கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், 28, என்பவருக்கும், ராஜ்குமாரின் மைத்துனர் மூவேந்தன் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவரையும் அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து அனுப்பினர். கடந்த 14ம் தேதி ஜாமினில் வெளியே வந்த ராஜ்குமாரிடம், தகராறு குறித்து அவரது மைத்துனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தினேஷ், அவரது நண்பர்களான ஹரிஷ், 25, அவரது சகோதரர் அஜய், 19, ஹரிசக்தி, 20, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, முட்டம் வடக்கு வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
ஹரிஷ் பாலிடெக்னிக் முடித்து வேலை தேடி வந்தார்; கும்பகோணம் தனியார் கல்லுாரியில் ஹரிசக்தி மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.
அப்போது அங்கு வந்த ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரும், தினேஷிடம் தகராறு செய்ததுடன், அவரை தாக்க முயன்றனர். தடுக்க முயன்ற ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகிய மூவரையும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு மூவரும் தப்பியோடினர்.
படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; ஹரி சக்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். அஜய் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷின் உறவினர்கள், ராஜ்குமார் வீட்டின் முன் பகுதியில் இருந்த கொட்டகைக்கு தீ வைத்ததுடன், மூவேந்தன் வீட்டில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்த எஸ்.பி., ஸ்டாலின் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.
பெரம்பூர் போலீசார், இறந்த இரு வாலிபர்களின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவு இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாராய வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி, இறந்தவர்களின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
நேற்று அதிகாலை பெரம்பூர் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், 'இந்த கொலையில் தொடர்புடைய மேலும் இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்ய வேண்டும்; இறந்த இருவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, கும்பகோணம் சாலையில் நேற்று, கொலையானவர்களின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சு நடத்திய எஸ்.பி., ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நிவாரணம் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்தார். அதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
உரிய இழப்பீடு
நேற்று மதியம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரின் பிரேத பரிசோதனை முடிந்து, வாகனத்தில் உடலை ஏற்ற மறுத்த உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், எப்.ஐ.ஆர்., நகல் வழங்கக் கோரியும் மூன்றாவது முறையாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் எஸ்.பி., ஸ்டாலின் பேச்சு நடத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர் பவுன்ராஜும் பேச்சு நடத்தினார்.
முடிவில், 'முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்' என, உறுதி அளித்ததை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு இறந்தவர்களின் உடலை பெற்றுச் சென்றனர்.
சட்டவிரோத சாராய விற்பனையால் நடந்த இரட்டை கொலை சம்பவம், மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
அரசின் கையாலாகாத்தனம்
தமிழகம் முழுதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது, அந்தப்பகுதி போலீசாருக்கு தெரியாமலா இருக்கும்? சாராய வியாபாரிகளால், இரு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா? துருப்பிடித்த இரும்பு கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து, தினமும் ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சம் இல்லையா? சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராக செல்ல வேண்டியது தானே? உங்களின் கையாலாகாத்தனத்தால், அமைதியான மக்களை, மிக மிக மோசமான எதிர் விளைவுகளுக்கு துாண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை, முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.
- அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவர்
பதற்றமான சூழல் வாடிக்கை
சாராய விற்பனையை தட்டி கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், சட்ட விரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கு, பதற்றமான சூழலை வாடிக்கையாக்கிய, தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது. இளைஞர்களை படுகொலை செய்த, சாராய வியாபாரிகளுக்கு, கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
தினகரன்
அ.ம.மு.க., பொதுச்செயலர்
விசாரணைக்கு முன் தீர்ப்பா?
மயிலாடுதுறை அருகே, சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள், மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. காவல்துறை, இந்த கொலை வாய் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என, பத்திரிகை செய்தி வெளியிடுகிறது.
வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே, காவல் துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா? இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது, தி.மு.க., அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை, மக்கள் பணியில் சிறிதாவது முதல்வர் ஸ்டாலின் செலுத்த வேண்டும்.
- பழனிசாமி
அ.தி.மு.க., பொதுச்செயலர்